பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு


பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2018 5:30 PM GMT (Updated: 10 Sep 2018 5:28 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கை தொடர்ந்து நடத்துமாறு லக்னோவில் உள்ள விசாரணை கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், தினசரி விசாரணை நடத்தி, 2019–ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் வழக்கை முடிக்குமாறும் கூறியது.

இதற்கிடையே, நீதிபதி யாதவுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கை முடிக்கும்வரை அவரை மாற்ற முடியாது என்று கூறி, பதவி உயர்வுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நீதிபதி எஸ்.கே.யாதவ், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அம்மனு, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காலக்கெடுவுக்குள் (ஏப்ரல் மாதம்) பாபர் மசூதி வழக்கை எந்தவகையில் முடிக்கப் போகிறீர்கள் என்பதை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி யாதவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உத்தரபிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு கூறினர்.

Next Story