பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
x
தினத்தந்தி 10 Sep 2018 9:00 PM GMT (Updated: 10 Sep 2018 7:13 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச பிரச்சினைகளே காரணம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

புதுடெல்லி,

நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டதாக மத்திய அரசும், பா.ஜனதாவும் கூறியுள்ளன.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் தோல்வியடைந்து விட்டது. இதற்கு மக்களிடம் ஆதரவு கிடைக்காததால், போராட்டத்தை வெற்றி பெறச்செய்வதற்காக வேறு வழிகளை கையாண்டனர். பாரத் பந்த் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும், அராஜக சம்பவங்களும் வேதனையை ஏற்படுத்தி உள்ளன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் குறித்து மோடி அரசுக்கும் நன்கு தெரியும். இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக தொடர்ந்து முயன்று வருகிறோம். இதற்கு நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

வெனிசூலாவில் அரசியல் நிலைத்தன்மை இல்லாமை, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது போன்ற காரணிகளால், எண்ணெய் உற்பத்தி செய்யும் இந்த நாடுகள் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அமெரிக்காவின் ஷேல் கியாஸ் உற்பத்தி இன்னும் தொடங்கவில்லை.

எண்ணெய் இறக்குமதியை சார்ந்து வாழும் நாடு இந்தியா. ஆனால் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள், தங்கள் சொந்த பிரச்சினைகளால் உற்பத்திக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எண்ணெய் வளக்குறைவு காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் உற்பத்தி சரிந்துள்ளது.

இத்தகைய சர்வதேச பிரச்சினைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கூட 2008-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அப்படி இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. ஆனால் இதற்கான தீர்வு எங்கள் கைகளில் இல்லை. இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

இதற்கிடையே பாரத் பந்த் மூலம் நாட்டில் குழப்பத்தையும், வதந்தியையும் பரப்ப முயல்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது பா.ஜனதா புகார் கூறியுள்ளது. காங்கிரஸ் ஒரு ஊழல் நிறைந்த கப்பல் எனவும், அதனுடன் இணையும் கட்சிகளும் காங்கிரசுடன் சேர்ந்து மூழ்கும் என்றும் பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தர் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

Next Story