போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது


போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி - 22 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 10 Sep 2018 11:00 PM GMT (Updated: 10 Sep 2018 8:23 PM GMT)

போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் சென்னை உள்பட நாடு முழுவதும் ரூ.1 கோடி மோசடி செய்த 22 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

புதுடெல்லி,

போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் ஏராளமான இளைஞர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்த கும்பலை, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் கைது செய்தனர். ஐதராபாத்தை சேர்ந்த ஒரு மாணவர் அளித்த புகாரின்பேரில் அக்கும்பல் பிடிபட்டது.

டெல்லி ஜானகிபுரியில் அவர்கள் நடத்தி வந்த போலி கால்சென்டரில் போலீசார் சோதனை நடத்தி, 26 செல்போன்கள், 5 லேப்டாப்கள், 8 டெபிட், கிரெடிட் கார்டுகள், 2 காசோலை புத்தகங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த கும்பல், போலி வேலைவாய்ப்பு இணையதளம் ஒன்றையும், போலி கால்சென்டரையும் தொடங்கியது. வேலை தேடும் இளைஞர்களைப் பற்றிய விவரங்களை இணையதளத்தில் திரட்டி, போலி கால்சென்டரில் இருந்து தொடர்பு கொண்டு, கனடாவில் வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டியது.

அதற்கு கட்டணமாக பணம் வசூலித்தது. பிறகு, அந்த பணத்தை திருப்பித்தருவதாக கூறி, ஏ.டி.எம். கார்டு பற்றிய தகவல்களை கேட்டு வாங்கியது. அப்படியே அந்த இளைஞர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை எடுத்து விட்டது. இதுபோன்று, சென்னை உள்பட நாடு முழுவதும் ஏராளமான இளைஞர்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது.

Next Story