கன்னியாஸ்திரி குறித்து தரக்குறைவான பேச்சு: கேரள எம்.எல்.ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்


கன்னியாஸ்திரி குறித்து தரக்குறைவான பேச்சு: கேரள எம்.எல்.ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
x
தினத்தந்தி 11 Sep 2018 4:19 AM GMT (Updated: 11 Sep 2018 4:19 AM GMT)

கன்னியாஸ்திரி குறித்து தரக்குறைவாக பேசிய கேரள எம்.எல்.ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில், ரோமன் கத்தோலிக்க பிஷப் ஃபிராங்கோ முலக்கல் தம்மை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கன்னியாஸ்திரி ஒருவர் குற்றம்சாட்டினார். அந்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, அந்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக பிற கன்னியாஸ்திரிகள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, சுயேச்சை எம்எல்ஏவான ஜார்ஜ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரியை தரக் குறைவாக அண்மையில் விமர்சித்தார். இதுதொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ஜார்ஜ் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா சம்மன் அனுப்பியுள்ளார். அந்த சம்மனில், சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர் (ஜார்ஜ் எம்எல்ஏ) இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது ஆகும். ஆதலால், வரும் 20ஆம் தேதி நேரில் ஆஜராகி, அத்தகைய விமர்சனத்தை ஏன் தெரிவித்தீர்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ரோமன் கத்தோலிக்க பிஷப் ஃபிராங்கோ முலக்கலுக்கு சம்மன் அனுப்பி இந்த வாரம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த தகவலை கேரள காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story