ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு அரசு வலியுறுத்தல்


ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ரிசர்வ் வங்கிக்கு அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Sep 2018 6:44 AM GMT (Updated: 11 Sep 2018 6:49 AM GMT)

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியை அரசு வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாக வரலாறு காணத வகையில் வீழ்ச்சி கண்டு வருகிறது.   கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது. தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.38 ஆக உள்ளது.  இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கச்சா எண்ணெய் இறக்குமதியிலும் எதிரொலித்து வருகிறது. 

இந்த நிலையில்,  ரூபாய் மதிப்பை உயர்த்துவது குறித்து சென்ற வாரம் அரசு தரப்பு, ஆர்பிஐ அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக தெரிகிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது அரசு தரப்பு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கு அதிக திட்டங்களை கொண்டு வருவது குறித்தும் எடுத்துக் கூறியுள்ளது. 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 11.6 சதவிகிதம் சரிந்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இது தான் மிகவும் மோசமான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று மத்திய அரசு அதிகாரி ஒருவர், ‘நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் தொடர்பில் தான் இருக்கிறது. தேவைப்படும் போது தலையிட்டு இந்த விஷயத்தில் தீர்வு காண்போம்’ என்று கூறினார். 

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் இருக்கும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் மத்திய ரிசர்வ் வங்கி 6.18 பில்லியன் டாலரை அந்நியச்செலவாணியை விற்பனை செய்துள்ளது.  மே மாதம் 5.8 பில்லியன் டாலர் விற்பனை செய்யப்பட்டது. எந்த குறிப்பிட்ட பரிமாற்ற மதிப்பையும் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஒட்டுமொத்தமாக ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை களையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


Next Story