கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு; செப்டம்பர் 19ல் பாதிரியார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு


கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு; செப்டம்பர் 19ல் பாதிரியார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 12 Sep 2018 4:08 PM GMT (Updated: 12 Sep 2018 4:08 PM GMT)

கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் செப்டம்பர் 19ந்தேதி விசாரணை குழு முன் நேரில் ஆஜராக பாதிரியாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொச்சி,

கேரளாவில் 46 வயது நிறைந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தர் நகரை சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முல்லக்கல் தன்னை 13 முறை கற்பழித்து உள்ளார் என பரபரப்பு புகார் கூறினார்.  கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது என அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் புகார் அளித்து 76 நாட்களுக்கு மேல் கடந்தும் விசாரணை முடிவடையாத நிலையில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவரது விடுதியில் உடன் தங்கியுள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில், பாதிரியார் பிராங்கோ மீது கற்பழிப்பு புகார் கூறிய கன்னியாஸ்திரியை விபசாரி என கேரளாவின் பூஞ்சார் தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ் கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

சர்ச்சையாக பேசி உணர்வுகளை புண்படுத்தியதற்காக எம்.எல்.ஏ. ஜார்ஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்குவோம் என கன்னியாஸ்திரியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், காவல் துறையின் ஐ.ஜி. விஜய் சகாரே இன்று செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, சாட்சிகள் மற்றும் குற்றவாளி ஆகியோரது வாக்குமூலங்கள் முரண்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடையாமல் இருந்தது.

இந்த முரண்கள் தெளிவடைந்த பின்பே கைது நடவடிக்கை பற்றி முடிவெடுக்க முடியும் என கூறினார்.

இதுபற்றி பாதிரியார் பிராங்கோ மூலக்கலுக்கு விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளார்.  வருகிற செப்டம்பர் 19ந்தேதி விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகும்படி அவர் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளார் என சகாரே தெரிவித்துள்ளார்.



Next Story