விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு: விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராகுல்காந்தி


விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு: விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 12 Sep 2018 5:46 PM GMT (Updated: 12 Sep 2018 5:46 PM GMT)

விஜய்மல்லையா- அருண்ஜெட்லி சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi

புதுடெல்லி,

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியான மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஜய் மல்லையா செய்தியாளர்களிடம், ஜெனிவாவில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வேண்டியது இருந்தது, இந்தியாவை விட்டு புறப்படும் முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசினேன். வங்கி கடன்களை செட்டில்மெண்ட் செய்யப்படும் என தெரிவித்தேன் என்று கூறி இருந்தார்.

விஜய் மல்லையா வெளியிட்ட இந்த தகவலுக்கு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “2014-ம் ஆண்டிலிருந்து அவர் (விஜய் மல்லையா) என்னை சந்திக்க அனுமதியை அளிக்கவில்லை. நான் அனுமதி அளிக்காத நிலையில் அவரை சந்தித்தேன் என்ற கேள்விக்கே இடம் கிடையாது,” என்று ஜெட்லி கூறினார்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்ததாக வெளியான செய்தி தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விசாரணை தொடர்பாக அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.



Next Story