அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு இந்திய அரசு உதவ வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா


அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு இந்திய அரசு உதவ வேண்டும் -  டக்ளஸ் தேவானந்தா
x
தினத்தந்தி 12 Sep 2018 10:00 PM GMT (Updated: 12 Sep 2018 7:43 PM GMT)

அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் இலங்கை எம்.பி. டக்ளஸ் தேவானந்தா நேரில் வலியுறுத்தினார்.

இலங்கை நாடாளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் குழு நல்லுறவு பயணமாக இந்தியா வந்துள்ளது. இந்த குழுவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யும் இடம் பெற்றுள்ளார்.

இந்த குழுவினர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.

இந்த பயணம் குறித்து டக்ளஸ் தேவானந்தா எம்.பி. நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதே எங்களது பயணத்தின் நோக்கம் ஆகும். எங்கள் குழுவில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் அவரவரது கருத்துகளை பிரதமர் மோடியிடம் தெரிவித்தனர். அந்த வகையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நானும் சில கோரிக்கைகளை வைத்தேன்.

இலங்கை தமிழர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் தேவை என்று கேட்டு இருக்கிறேன். போரின் போது அங்கிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்கு (மீண்டும் இலங்கைக்கு சென்று குடியேறுவது) தேவையான அனுமதியை பெறுவதில் (‘எக்சிட் பெர்மிட்’) சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

எனவே அதை எளிமைப்படுத்தி, அகதிகளின் மீள்குடியேற்றத்துக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்றும், 1987-ம் ஆண்டில் இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

தமிழகத்தில் இலங்கை அகதிகள் வாங்கி வைத்துள்ள அசையும் சொத்துகளை இலங்கைக்கு கொண்டுவர எளிய நடைமுறையை பின்பற்றவும் கோரிக்கை விடுத்தேன். இதையெல்லாம் கவனத்தில் கொள்வதாக பிரதமர் சொல்லி இருக்கிறார்.

மாகாண அரசுகளுக்கு நிலம் மற்றும் போலீஸ் நிர்வாக அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் வகையில் இலங்கை அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. தனது செல்வாக்கை பயன்படுத்தி இந்த அரசியல் சாசன திருத்தத்தை முழுஅளவில் செயல்படுத்த இலங்கை அரசை வற்புறுத்துமாறும், தமிழர் கட்சிகளை சமாதானப்படுத்துமாறும் பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டேன். இவ்வாறு டக்ளஸ் தேவானந்தா கூறினார்.


Next Story