கேரளா: கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் பேராயருக்கு போலீசார் சம்மன்


கேரளா: கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரில் பேராயருக்கு போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:45 PM GMT (Updated: 12 Sep 2018 8:19 PM GMT)

கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகாரின் பேரில் பேராயருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

கொச்சி,

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016 வரை பலமுறை கற்பழித்ததாக, கடந்த ஜூலை மாதம் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் குறித்து வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால் புகார் அளித்து 2 மாதங்கள் கடந்த பிறகும் பேராயருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சக கன்னியாஸ்திரிகளும், பல்வேறு கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினரும் கொச்சியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 5 கன்னியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். பேராயர் மூலக்கல்லை கைது செய்யும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் அறிவித்து உள்ளனர்.

நேற்று 5-வது நாளை எட்டிய இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், மகளிர் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனவே இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகார் மீதான விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக மாநில அரசு தெரிவித்தது. அதேநேரம் தன் மீதான புகாரை திரும்ப பெறுவதற்கு பேராயர் பிராங்கோ, ரூ.5 கோடி வரை பேரம் பேசியதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பேராயர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேராயர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

முன்னதாக பேராயர் தனக்கு இழைத்த கொடூரத்தை விளக்கி டெல்லியில் உள்ள வாடிகன் தூதருக்கு கன்னியாஸ்திரி கடிதம் எழுதினார். பேராயர் பிராங்கோ, தனது செல்வாக்கு மற்றும் பணபலத்தை பயன்படுத்தி விசாரணையை முடக்க முயல்வதாக கூறியிருந்த கன்னியாஸ்திரி, பிராங்கோவை அந்த பொறுப்பில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

பொதுமக்கள் போராட்டம், கோர்ட்டு தலையீடு மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட அழுத்தங்களை தொடர்ந்து, பேராயர் பிராங்கோ மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி எர்ணாகுளம் போலீஸ் ஐ.ஜி., கோட்டயம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் வைக்கம் துணை சூப்பிரண்டு ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். முடிவில் அவர்கள், 19-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு சம்மன் அனுப்பினர்.

இதற்கிடையே ஜலந்தரில் செய்தியாளர்களிடம் பேசிய பேராயர் பிராங்கோ, தான் சட்டத்துக்கு கீழ்ப்படிபவன் எனவும், போலீசார் சம்மன் அனுப்பினால் நிச்சயம் ஆஜராவேன் எனவும் கூறினார்.

Next Story