விவசாயிகளுக்கு புதிய கொள்முதல் கொள்கை: ரூ.15 ஆயிரம் கோடியில் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்


விவசாயிகளுக்கு புதிய கொள்முதல் கொள்கை: ரூ.15 ஆயிரம் கோடியில் அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 12 Sep 2018 11:15 PM GMT (Updated: 12 Sep 2018 9:18 PM GMT)

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிசெய்வதற்கு ஏற்ற வகையில் புதிய கொள்முதல் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. ரூ.15 ஆயிரம் கோடியில் இதை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி,

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி, கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர், விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்யும் வழிமுறை உருவாக்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் புதிய கொள்முதல் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ‘ பிரதம மந்திரி அன்னதடா ஆய் மவுல்யா சன்ரக்சண அபியான்’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த புதிய கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இது குறித்து மத்திய விவசாயத்துறை மந்திரி ராதாமோகன் சிங் நிருபர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கொள்முதல் கொள்கையின்படி மாநில அரசுகள் தேர்ந்தெடுத்து அமல்படுத்த ஏற்ற வகையில் 3 விருப்ப தேர்வு வாய்ப்புகள் வழங்கப்படும்.

1. தற்போது நடைமுறையில் உள்ள விலை ஆதரவு திட்டம் (பி.எஸ்.எஸ்.). 2. புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள விலை பற்றாக்குறை பண பட்டுவாடா திட்டம் (பி.டி.பி.எஸ்.). 3. பரிசோதனை அடிப்படையிலான தனியார் கொள்முதல் ‘ஸ்டாக்கிஸ்டு’ திட்டம் ( பி.பி.எஸ்.எஸ்.).

குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) விட சந்தையில் சரக்குகளின் விலை குறைகிறபோது கொள்முதல் செய்வதற்கு இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த புதிய கொள்கை, விவசாயிகளுக்கு அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு நல்ல லாபம் தருகிற விலைகளை உறுதிசெய்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு ஆகும்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரூ.15 ஆயிரத்து 53 கோடி ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.6 ஆயிரத்து 250 கோடி மட்டும் நடப்பு ஆண்டுக்கானது.

கொள்முதல் செய்வதற்காக கடன் பெற, கொள்முதல் அமைப்புகளுக்கு அரசின் உத்தரவாதம் மேலும் ரூ.16 ஆயிரத்து 550 கோடிக்கு வழங்கப்படும். இதன்மூலம் இந்த தொகையின் மொத்த அளவு ரூ.45 ஆயிரத்து 550 கோடியாக அமைகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள விலை பற்றாக்குறை பண பட்டுவாடா திட்டமானது (பி.டி.பி.எஸ்.), மத்திய பிரதேச மாநில அரசின் பாவந்தார் புக்தான் யோஜனா திட்டத்தை பின்பற்றி வகுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டமானது, எண்ணெய் வித்து சாகுபடி செய்கிற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த திட்டத்தின்கீழ், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும், மொத்த சந்தையில் நிலவுகிற மாதாந்திர சராசரி விலைக்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை விவசாயிகளுக்கு அரசு வழங்கும். மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிற 25 சதவீத எண்ணெய் வித்துக்களுக்கு மட்டுமே இது நடை முறைப்படுத்தப்படும்.

மேலும், இந்த வித்தியாச தொகையானது, அறிவிக்கப்பட்ட சந்தையில் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு, வெளிப்படையான ஏல முறையில் விற்பனை செய்கிற எண்ணெய் வித்து விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். சோதனை அடிப்படையில் எண்ணெய் வித்துக்கள் கொள்முதலில் தனியாரை மாநிலங்கள் களம் இறக்க அனுமதிக்கப்படும்.

சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, எண்ணெய் வித்துக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக பெருக்க வேண்டும் என்ற கனவை நனவாக்குவதற்கு அரசு உறுதி கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story