காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்


காஷ்மீரில் என்கவுண்டரில் தீவிரவாதி பலி; 8 போலீசார் காயம்
x
தினத்தந்தி 13 Sep 2018 11:43 AM GMT (Updated: 13 Sep 2018 11:43 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி பலியாகி உள்ளான். டி.எஸ்.பி. உள்பட 8 போலீசார் காயம் அடைந்தனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பகுதியிலுள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் தீவிரவாதிகள் இரவு நேரத்தில் புகுந்து, மாற்றுவதற்கு வேறு உடைகளை தரும்படி கேட்டுள்ளதுடன், உணவு தரும்படியும் கேட்டுள்ளனர்.  தங்களுக்கு வாகனம் கிடைக்க ஏற்பாடு செய்தால் பணம் தருகிறோம் என்றும் அவரிடம் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

அதன்பின்னர் அவர்கள் சென்று விட்டனர்.  இதுபற்றி கிராமவாசி போலீசாரை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளார்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.  இதில் மத்திய ரிசர்வ் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்டோர் தீவிரவாதிகளை நெருங்கினர்.

இந்த வேட்டையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர்.

இதில், தீவிரவாதி ஒருவன் சுட்டு கொல்லப்பட்டான்.  இந்த சம்பவத்தில் டி.எஸ்.பி. மோகன் லால் உள்ளிட்ட 8 போலீசார் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story