கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் சி.பி.ஐ. விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு


கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார் சி.பி.ஐ. விசாரணை கோரி கேரள ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 8:58 PM GMT)

கேரள கன்னியாஸ்திரி கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

கொச்சி, 

கேரள கன்னியாஸ்திரி கொடுத்த கற்பழிப்பு புகார் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

பேராயருக்கு சம்மன்

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் கற்பழித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014–ம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் பிராங்கோ பலமுறை தன்னை கற்பழித்ததாக கன்னியாஸ்திரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகாரை வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரிக்கவில்லை என்றும், வழக்கை நீர்த்து போகச்செய்ய போலீசார் முயல்வதாகவும் கூறி கொச்சியில் கத்தோலிக்க சீர்திருத்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில், 19–ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது.

பொறுமை காக்க வேண்டும்

இதற்கிடையே கன்னியாஸ்திரியின் கற்பழிப்பு புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி 3 பேர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதில் ஒரு மனுதாரர் கோரி இருந்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. இதில் போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை வெளியிட்ட நீதிபதிகள், பேராயரிடம் 19–ந் தேதி போலீசார் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம் என அறிவித்தனர்.

கன்னியாஸ்திரிக்கு பாதுகாப்பு

இந்த விவகாரத்தில் மனுதாரர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதால், விசாரணைக்கு சிலகாலம் பிடிக்கும் எனவும் தெரிவித்தனர். பின்னர் வழக்கின் விசாரணையை 24–ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து போலீசார் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.


Next Story