நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுவதால் எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் பிரதமர் மோடி பேச்சு


நாடு முழுவதும் பா.ஜனதா அலை வீசுவதால் எதிர்க்கட்சிகளுக்கு அச்சம் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 13 Sep 2018 10:30 PM GMT (Updated: 14 Sep 2018 12:28 AM GMT)

2014–ல் இருந்ததை விட மிகப்பெரிய பா.ஜனதா அலை நாடு முழுவதும் வீசுவதால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

2014–ல் இருந்ததை விட மிகப்பெரிய பா.ஜனதா அலை நாடு முழுவதும் வீசுவதால் எதிர்க்கட்சிகள் அச்சத்தில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொண்டர்களிடையே உரை

பிரதமர் நரேந்திர மோடி, ‘நமோ’ செல்போன் செயலி மூலம் அடிக்கடி பா.ஜனதா தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில் அருணாச்சல் மேற்கு, காசியாபாத், ஹசாரிபாக், ஜெய்ப்பூர் ஊரகம் மற்றும் நவடா நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பா.ஜனதா தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார்.

அப்போது அரசின் வளர்ச்சி திட்டங்கள், அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் வியூகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–

பா.ஜனதா அலை

2013 மற்றும் 2014–ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய பா.ஜனதா அலை வீசுகிறது. இதைப்பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இந்த அலையே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைத்துள்ளது. இல்லையென்றால் அவை ஒவ்வொன்றும் அடித்துச்செல்லப்படும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் நம்பிக்கையின் நெருக்கடியை உணர்ந்துள்ளன. அவை தூக்கத்தில் இருந்து எழும்ப மறுக்கின்றன. பிற பிரச்சினைகளை பற்றி பேசுவதாலும், அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குவதாலும் வாக்காளர்களிடம் நம்பிக்கையை பெற முடியும் என நினைக்கின்றன. ஆனால் இந்திய மக்கள் இன்று உணர்திறன் மிக்கவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

கடமை ஆற்றவில்லை

கடந்த 4½ ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. பா.ஜனதாவுக்கு வாக்களித்த மக்கள், ஊழலில் திளைத்த காங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக கூட தங்கள் கடமையை அவர்கள் ஆற்றவில்லை.

ஊழலில் மூழ்கி இருந்த நிலக்கரி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளை அதிலிருந்து வெளியே எடுத்த எங்கள் அரசு, இன்று வேகமாக வளர்ச்சியடையும் துறையாக தொலைத்தொடர்பு துறையை மாற்றி இருக்கிறது. எங்கள் அரசின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் சாதி, இனம் போன்ற வேறுபாட்டை அடிப்படையாக கொண்டது அல்ல. மாறாக சமத்துவமே ஒரே குறிக்கோள் ஆகும்.

தலைவர்கள் தியாகம்

பா.ஜனதாவில் மட்டுமே சாதாரண தொண்டரும் அதன் தலைவராக முடியும். நாளை என்னுடைய இடத்துக்கும் வேறு ஒருவரால் வர முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் கட்சி. அந்த குடும்பத்தின் நலனுக்காக பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தியாகம் செய்து வருகின்றனர். அதைப்பார்த்து பரிதாபம் அடைகிறேன்.

பா.ஜனதாவின் ஒவ்வொரு தொண்டரும் தனது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனது வாக்குச்சாவடியே வலிமையானது என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


Next Story