தேசிய செய்திகள்

பள்ளி வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை டெல்லி ஐகோர்ட்டு கருத்து + "||" + School classrooms There is nothing wrong with a secret surveillance camera

பள்ளி வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை டெல்லி ஐகோர்ட்டு கருத்து

பள்ளி வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை டெல்லி ஐகோர்ட்டு கருத்து
டெல்லி அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, 

டெல்லி அரசு பள்ளிகளின் வகுப்பறைகளில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் டேனியல் ஜார்ஜ் என்பவர் சார்பில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கில், வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவது, மாணவ, மாணவியரின் அந்தரங்க உரிமையை பாதிக்கக்கூடியது என கூறி தடை கோரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே. ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘வகுப்பறைகளில் அந்தரங்கம் என்று சொல்லும்படியாக எதுவும் நடப்பது இல்லை. அப்படி இருக்கிறபோது, வகுப்பறைகளில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்துவதில் தவறு இல்லை. இதில் அந்தரங்கம் பற்றிய பிரச்சினை எழவில்லை’’ என கூறினர்.

மேலும், ‘‘அந்தரங்கம் பற்றி கவலைப்படுகிறபோது, அதைக் குழந்தைகளின் பாதுகாப்புடன் சம நிலையில் வைத்து பார்க்க வேண்டும். வகுப்பறைகளில் ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர்கள் தரப்பில் அடிக்கடி கூறப்படுகிறது. எனவே வகுப்பறைகளின் உண்மையான நிலையை ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் காட்டும்’’ எனவும் கூறினர்.

வழக்குதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெய் தேஹத்ராய் வாதிடும்போது, ‘‘குழந்தைகள் வகுப்பறையில் அடிக்கடி தங்களுக்குள் விவாதித்துக்கொள்ளுகிறபோது, ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பது ஆரோக்கியமற்றது. எனவே வகுப்பறைகளில் பொருத்த கேமராக்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்றார்.

ஆனால் நீதிபதிகள், ‘‘வகுப்பறையில் அந்தரங்கம் என எதுவும் கிடையாது. கோர்ட்டு நடவடிக்கைகளைக்கூட ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தி பதிவு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு யோசனை கூறி இருக்கிறது’’ என கூறி, வழக்குதாரருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து விட்டனர்.