மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.4,700 கோடி வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, கேரளா அறிக்கை அனுப்பியது


மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.4,700 கோடி வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு, கேரளா அறிக்கை அனுப்பியது
x
தினத்தந்தி 13 Sep 2018 10:00 PM GMT (Updated: 13 Sep 2018 9:27 PM GMT)

மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கேரள அரசு அறிக்கை அனுப்பி உள்ளது.

புதுடெல்லி, 

மழை, வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, கேரள அரசு அறிக்கை அனுப்பி உள்ளது.

ரூ.600 கோடி ஒதுக்கீடு

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின. தற்போது அங்கு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மழை வெள்ளத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்றும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வந்தபோது ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தனர். அதன்படி மத்திய தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கேரளாவுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கேரள அரசு அறிக்கை

இந்நிலையில் கேரள அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் 14 மாவட்டங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டன. மழை, வெள்ளம், நிலச்சரிவால் 488 பேர் இறந்துள்ளனர். விவசாய பயிர்களும் நாசம் அடைந்துள்ளன. எனவே மாநில உட்கட்டமைப்புகளை சீரமைக்க மத்திய அரசு உடனடியாக ரூ.4 ஆயிரத்து 700 கோடியை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மாவட்டம் வாரியாக எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்பதை அந்த அறிக்கையில் விரிவாக கேரள அரசு குறிப்பிட்டு உள்ளது.

கேரள அரசின் கோரிக்கையின்படி அந்த மாநிலத்தில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு விரைவில் செல்லும் என தெரிகிறது. சேதங்களை மத்திய குழு பார்வையிட்டு, ஆய்வு செய்து உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கையாக அளிக்கும். அதை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு பரிசீலித்து கேரளாவுக்கு எவ்வளவு தொகை விடுவிக்கலாம் என முடிவு எடுக்கும் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story