டெல்லி பல்கலைக்கழகம் இவிஎம் இயந்திரங்களை தனியாக வாங்கியுள்ளது: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்


டெல்லி பல்கலைக்கழகம் இவிஎம் இயந்திரங்களை தனியாக வாங்கியுள்ளது: தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 14 Sep 2018 2:46 AM GMT (Updated: 14 Sep 2018 2:46 AM GMT)

டெல்லி பல்கலைக்கழக தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க தேர்தல் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. தலைவர், துணை தலைவர், செயலாளர், இணை செயலாளர் ஆகிய நான்கு பதவிகளுக்கு, ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி., என அழைக்கப்படும் அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மற்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ஓட்டுப் பதிவு முடிவடைந்ததும் ஓட்டு எண்ணிக்கை நேற்று மாலை தொடங்கியது. இதில் ஏ.பி.வி.பி. அமைப்பின் அங்கிவ் பசோயா தலைவராகவும்,, துணை தலைவராக சக்திசிங், இணை செயலாளராக ஜோதி சவுத்ரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்திய தேசிய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஆகாஷ் சவுத்ரி செயலாளராக வெற்றி பெற்றார். 

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மீண்டும் புதிதாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) கோரிக்கை வைத்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.  பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தேர்தலை புதிதாக மீண்டும் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன

இதற்கிடையே, டெல்லி  பல்கலைக்கழக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது அல்ல என்று டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளித்துள்ளார். 

இதுதொடர்பாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம்தான் வழங்கியது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. மாநில தேர்தல் ஆணையத்திடம் இதுபோன்ற வாக்குப் பதிவு இயந்திரங்களே இல்லை. இந்த இயந்திரங்களை டெல்லி பல்கலைக்கழகம் தனியாக வாடகைக்கு வாங்கி உள்ளது. இதுதொடர்பாக விளக்கமளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தில் மூத்த அதிகாரிகள் தற்போது யாரும் இல்லை என்பதால் இந்த விவகாரம் குறித்து பிறகு விரிவான அறிக்கை வெளியிடப்படும் ‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story