இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க  சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 14 Sep 2018 5:54 AM GMT (Updated: 14 Sep 2018 5:54 AM GMT)

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி,

ராக்கெட் தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்ரோ மையத்தின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்  ராக்கெட் அனுப்பும் தொழில்நுட்பத்தில் திரவ எரிபொருள் பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்தவர்.

இவர், அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக் கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுஸியா ஹுசேன் ஆகியோர் மூலமாக ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்த ரகசியங்களை விற்பனை செய்ததாக 1994 நவம்பர் 30-ம் தேதி கேரளா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவருடன் சேர்ந்து சந்திரசேகரன், எஸ்.கே.ஷர்மா ஆகிய கான்ட்ராக்டர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 50 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனை கேரள மாநில உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை என்கிற பெயரில் டார்ச்சர் செய்தார்கள். பின்னர், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு தலைமை குற்றவியல் நீதிபதி மாற்றம் செய்தார். சி.பி.ஐ நடத்திய விசாரணையில், இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது தெரிய வந்ததால் அதை நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நம்பி நாராயணனுக்கு முக்கியப் பொறுப்புகள் எதுவும் கொடுக்காத நிலையில், 2001-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், தன்னை வழக்கில் சிக்கவைத்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த 20 வருடங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்திவந்தார்.

தனது தொழில் திறமையை முடக்கும் வகையிலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோர்மீது நடவடிக்கை எடுக்குமாறும், நஷ்டஈடு வழங்குமாறும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில்  இன்று தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு  ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. 

Next Story