ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் காதலியிடம் காதலை தெரிவித்த அதிகாரி


ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் காதலியிடம் காதலை தெரிவித்த அதிகாரி
x
தினத்தந்தி 14 Sep 2018 10:23 AM GMT (Updated: 14 Sep 2018 10:23 AM GMT)

ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் அதிகாரி ஒருவர் காதலியிடம் தனது காதலை தெரிவித்து உள்ளார்.

சென்னை, 

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.) 106-வது பேட்ஜை சேர்ந்த 252 இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா கடந்த  8 ந்தேதி  நடந்தது. 

பயிற்சியின் போது அனைத்து பிரிவுகளிலும் முதலிடமும், ஒட்டுமொத்த ‘மெரிட்’ அடிப்படையில் முதலிடமும் பிடித்த சித்தார்த் சிங்குக்கு கவுரவ வாள் பரிசாக வழங்கப்பட்டது. அடுத்த இடத்தை பிடித்த ரவீனே பானியாவுக்கு தங்கப்பதக்கமும், ஒட்டுமொத்த ‘மெரிட்’ அடிப்படையில், 2-வது இடம் பிடித்த சோனா தேகம்மாவுக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடத்தை பெற்ற உத்கார்ஸ் சிங் என்பவருக்கு வெண்கலப்பதக்கமும் வழங்கப்பட்டன.

சிறந்த கம்பெனியாக ‘நாவ்ஷெரா’ கம்பெனி தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிட்டு, பட்டாசுகள் வெடித்து, பயிற்சியை நிறைவு செய்தவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பயிற்சி முடித்தவர்களில் 198 ஆண் அதிகாரிகளும், 38 பெண் அதிகாரிகளும் இந்திய ராணுவத்தில் ஒதுக்கப்பட்ட பணிகளில் சேர உள்ளனர். இதுதவிர பூடான், பிஜி தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த 14 ஆண் அதிகாரிகளும், 2 பெண் அதிகாரிகளும், பயிற்சி முடித்து அவர்களுடைய நாடுகளுக்கு செல்கின்றனர். விழாவை காண வந்திருந்த பெற்றோர், தங்களது பிள்ளைகள் இளம் ராணுவ அதிகாரிகளாக பதவியேற்றதை கண்டு மகிழ்ந்தனர்.

கவுரவ வாள் பெற்ற சித்தார்த் சிங் கூறும்போது, ‘நான் எனது பெற்றோரிடம் கவுரவ வாள் பெறுவேன் என்று சத்தியம் செய்திருந்தேன். இப்போது அது கிடைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அதனை எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.

அதேபோல் தங்கப்பதக்கம் பெற்ற ரவீனே பானியா கூறும்போது, ‘பயிற்சியில் தங்க மங்கையாக திகழ்ந்த நான், பணியிலும் தங்க மங்கையாக இருந்து நாட்டுக்கு சேவையாற்றுவேன்’ என்றார்.

சென்னையை சேர்ந்த பி.டெக். என்ஜினீயர் கார்த்திகா கூறுகையில், நாட்டுக்காக சேவை செய்வதற்காக ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பதவியேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பிடித்த வேலையை, நாட்டு மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் சிறப்பாக செய்வேன்’ என்றார்.

பயிற்சி முடித்த ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம், ஜசி நியுகேல் ஆகியோர் கூறுகையில், ‘பலம் நிறைந்த இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் கடின பயிற்சி பெற்றதை பெருமையாக நினைக்கிறோம். இங்கு புதிய தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டோம். இதற்காக ஆப்கானிஸ்தான் சார்பில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம்’ என்றனர்.

இந்த நாள்  இராணுவத் துணைத் தலைவர் தாகூர் சந்திரேஷ் சிங்கிற்கு ஒரு மறக்க முடியாத நாள்.  25 வயதான தாகூர் தான் பட்டம் பெற்ற பிறகு ராஜ்புதன ரைஃபிள்ஸ் இந்திய இராணுவத்தின் ஒரு அதிகாரியாக ஆனார்.  அணி வகுப்பு நடந்து முடிந்து வெளியே வந்ததும் தக்கூர் மண்டியிட்டு தனது நீண்ட நாள் காதலியிடம் தனது காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். அவரும் ஏற்று கொண்டார். தாகூர்  மற்றும் காதலி தாரா மேத்தா ஆகியோரின்  இது குறித்த புகைப்படம்  2 நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் வெளியிடபட்டது. இதற்கு 34 ஆயிரம் லைக்குகள் கிடைத்து உள்ளன.

இருவரும்  பெங்களூரில் உள்ள  செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சந்தித்தனர். அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு பாடங்களைக் கொண்டிருந்தாலும், இருவருக்கும் ஹிந்தி ஒரு பொதுவான வகுப்பாக இருந்தது.

Next Story