பெண் வேடத்தில் கவுதம் கம்பீர் “மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம்” பலரும் பாராட்டு


பெண் வேடத்தில் கவுதம் கம்பீர் “மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம்” பலரும் பாராட்டு
x
தினத்தந்தி 14 Sep 2018 3:51 PM GMT (Updated: 14 Sep 2018 3:51 PM GMT)

திருநங்கைகளுக்கான நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பெண் வேடத்தில் கலந்துகொண்ட படங்கள் வைரலாகி வருகிறது. #GautamGambhir


புதுடெல்லி, 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், மனிதநேய செயல்களையும், பல்வேறு சமூக உதவிகளையும் செய்து வருகிறார். ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழக்கும் பாதுகாப்பு படையினரின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிப்பது, அவர்களுடைய குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பது, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது என பல்வேறு மனிதநேய செயல்களை கவுதம் கம்பீர் செய்து வருகிறார். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். சமூக பிரச்சினைகளுக்காகவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்நிலையில் டெல்லியில் திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் ஹிஜ்ரா ஹப்பா எனும் விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிக்கு கம்பீர் அழைக்கப்பட்டு இருந்தார். இதனை ஏற்று கம்பீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழாவில் கம்பீர் துப்பட்டா அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து பெண் போன்ற அலங்காரத்துடன் தோன்றி திருநங்கைகளை உற்சாகப்படுத்தினார். 

திருநங்கைகளுடன் அவர் இருக்கும் படங்களை கம்பீர் டுவிட்டரிலும் பதிவு செய்து இருக்கிறார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கம்பீரின் இந்த மனிதநேய செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக கம்பீர் தனது டுவிட்டர் பதிவில், ஆண் அல்லது பெண்ணாக இருப்பது விஷயமல்ல. மனித நேயம் மிக்க மனிதர்களாக இருப்பது தான் முக்கியம். திருநங்கைகளான அபினா அஹிர், சிம்ரன் சாஹிக் ஆகியோர் எனக்கு ராக்கி கயிறு கட்டி என்னை சகோதரராக ஏற்றுக்கொண்டனர். நானும் அவர்களை சகோதரிகளாக பெருமையுடன் ஏற்றுக் கொண்டேன். நீங்களும் அவர்களை சகோதரிகளாக ஏற்பீர்களா? என்று குறிப்பிட்டுள்ளார். 
 
கம்பீரின் மனிதநேய செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள், அவருடைய பதிவும், பெண் வேடமிட்ட படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Next Story