நாடாளுமன்ற தேர்தல்: மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியா?


நாடாளுமன்ற தேர்தல்: மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியா?
x
தினத்தந்தி 14 Sep 2018 8:30 PM GMT (Updated: 14 Sep 2018 7:48 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய மந்திரி பஸ்வானை எதிர்த்து மகள் போட்டியிட போவது குறித்து, அவரது கணவர் கூறிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாட்னா,

பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி, லோக்ஜனசக்தி. பீகாரை சேர்ந்த இந்த கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய மந்திரியாக உள்ளார். இவர் அங்கு உள்ள ஹாஜிப்பூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

பஸ்வானுக்கு முதல் மனைவி மூலம் பிறந்த மகள் ஆஷா. இவரது கணவர் அனில் சாது.

பாட்னாவில் அனில் சாது, நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் லோக்ஜனசக்தி கட்சி தாழ்த்தப்பட்ட மக்களை கொத்தடிமைகள் போல நடத்துவதாக சாடினார். ராம்விலாஸ் பஸ்வான் மீது அவர் சார்ந்து உள்ள சமூகத்திலேயே கோபம் உள்ளது என்றும் கூறினார்.

அப்போது அவரிடம், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் பஸ்வானை எதிர்த்து நீங்களோ அல்லது உங்களது மனைவியோ போட்டியிடுவீர்களா?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “நாங்கள் இருவருமே தயாராகத்தான் இருக்கிறோம். ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத்தும், தேஜஸ்வி யாதவும் எங்களுக்கு போட்டியிடும் வாய்ப்பு அளித்தால் போட்டியிட தயார்” என பதில் அளித்தார்.

இது தொடர்பாக அவர் லாலு பிரசாத்திடமும், தேஜஸ்வியிடமும் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். இது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story