விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தற்காலிக குளங்களை அமைத்த மாநகராட்சி நிர்வாகம்


விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக தற்காலிக குளங்களை அமைத்த மாநகராட்சி நிர்வாகம்
x
தினத்தந்தி 15 Sep 2018 5:41 AM GMT (Updated: 15 Sep 2018 5:41 AM GMT)

ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மாநகராட்சி நிர்வாகம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தற்காலிக குளங்களை அமைத்துள்ளது. #Bhubaneswar #TemporaryPonds

புவனேஷ்வர்,

நாடு முழுவதும் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த விநாயகர் சிலைகள் பெரும்பாலும் கடல்களிலும், ஆறுகளிலும் கரைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் புவனேஷ்வர் மாநகராட்சி நிர்வாகம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு தற்காலிக குளங்களை அமைத்துள்ளது. நகரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பாந்த்ராவுக்கு அருகில் குஹாகாய் பாலம், டான்கபானி சாலை மற்றும் லிங்கிபூர் ஆகிய பகுதிகளில் தற்காலிக குளங்களை அமைத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், சிலைகளை கரைப்பதால் ஏற்படும் தண்ணீர் மாசுபாடு மற்றும் உடல்நலக்கோளாறுகளை தடுக்கவே இந்த குளங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து புவனேஷ்வர் மாநகராட்சி நிர்வாக சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ”சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்காக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பல கலவைகள் சேர்க்கப்படுகின்றன. லெட், காட்மியம், குரோமியம் மற்றும் நிக்கல் போன்ற கலவைகள் சிலைகளில் கலந்துள்ளன. இவை ஆறுகளில் கலக்கும் போது நீரை மாசுபடுத்துகிறது. மேலும் அந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு உடல்நலக்கோளாறையும் ஏற்படுத்துகிறது. இந்த அசுத்த நீரால் விலங்குகளும், தாவரங்களும் பாதிக்கப்படுகின்றன. சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே புவனேஷ்வர் நிர்வாகம் தற்காலிக குளங்களை மாநகரின் மூன்று பகுதிகளில் அமைத்துள்ளது. இந்த குளங்களில் சிலைகள் கரைக்கப்பட்ட பின்னர், நீரானது சுத்திகரிக்கப்படும். பின்னர் சுத்திகரிக்கப்பட்ட நீர் அருகிலுள்ள ஆற்றுப்பகுதிகளில் சேர்க்கப்படும்” எனக் கூறினர்.

Next Story