சிக்கிம் விமானநிலையத்தை வரும் 23-ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி


சிக்கிம் விமானநிலையத்தை வரும் 23-ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Sep 2018 6:19 AM GMT (Updated: 15 Sep 2018 6:19 AM GMT)

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை செப்டம்பர் 23-ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். #SikkimAirport

கேங்டாக்,

சிக்கிம் மாநிலம் கடந்த 20 ஆண்டுகளில் உலக புகழ் பெற்ற உயிரி சுற்றுலா தலம் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளது.  நாட்டில் முழுவதும் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும் முதல் மாநிலம் என்ற தனித்துவ அடையாளத்தினையும் அது கொண்டுள்ளது. இந்நிலையில் சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக்கிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பாக்யோங் பகுதியில் பசுமை விமானநிலையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி திறந்து வைக்கிறார். 

இது குறித்து சிக்கிம் மாநில தலைமை செயலாளர் ஏ.கே.ஸ்ரீவஷ்டாவா கூறுகையில், இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக சிக்கிம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். வரும் 23-ஆம் தேதி வருகை தரும் பிரதமர், பாக்யோங் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைப்பார். பின்னர் பாக்யோங்கிலுள்ள சேவியர் பள்ளி மைதானத்தில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுவார் எனக் கூறினார். முன்னதாக பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் சிக்கிம் மாநிலத்திற்கு வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செப்டம்பர் 23-ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்படும் பாக்யோங் விமான நிலையம், அக்டோபர் மாதம் முதல் வாரம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த கட்டணமான ஸ்பைஸ் ஜெட் விமானநிறுவனம் இந்த விமான நிலையத்திற்கு வெள்ளோட்டமாக விமானங்களை இயக்கி வந்தது.



Next Story