டெல்லியில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம்: மேலும் இருவரை கைது செய்த போலீசார்


டெல்லியில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம்: மேலும் இருவரை கைது செய்த போலீசார்
x
தினத்தந்தி 15 Sep 2018 8:20 AM GMT (Updated: 15 Sep 2018 8:20 AM GMT)

டெல்லியில் இளம்பெண் தாக்கப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரியின் மகனான ரோஹித் சிங் தோமர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் வீடியோ பதிவு செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். #Delhi

புதுடெல்லி,

டெல்லி காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ கடந்த இரண்டாம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகியது. இளம்பெண்ணை ரோஹித் முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளி கொடூரமான முறையில் தாக்கிய காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தது. இளம்பெண்ணை தோமர் தாக்கியதை அவனுடைய நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவில் அவர்கள் “இவ்வளவு அடி கொடுத்தது போதும், நிறுத்து ரோஹித் என்கிறார்கள்” ஆனால் அவன் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. யாரும் இளம்பெண்ணை ரோஹித் தாக்குவதை நிறுத்த முன்வரவில்லை.

இந்நிலையில் வீடியோவில் இடம்பெற்று இருந்த பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் சென்று தன்னுடைய அறிக்கையை தெரிவித்திருந்தார். ரோஹித் என்னை அவனுடைய நண்பரின் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டான். அங்கு சென்றதும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொடூரமான முறையில் தாக்கினான். காவல் துறையிடம் செல்வேன் என்று கூறிய போது விளைவுகள் கடினமாக இருக்கும் என்று மிரட்டினான் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் ரோஹித் சிங் தோமரை கைது செய்தனர்.

இந்நிலையில் இளம்பெண்ணை ரோஹித் சிங் தோமர் தாக்குவதை வீடியோ பதிவு செய்த அவருடைய நண்பர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஹாசன் அலி என்பவர் அலுவலகத்தின் உரிமையாளர் என்றும், மற்றொருவரான ராஜேஷ் அலுவலகத்தின் பணியாளர் என்றும் தகவலும் வெளியாகியுள்ளது. முன்னதாக வீடியோ வைரலாகிய நிலையில் விசாரணை நடத்தி, நடவடிக்கையை எடுக்குமாறு டெல்லி போலீசுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story