லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து மல்லையாவை தப்ப விட்டார் சி.பி.ஐ. இயக்குனர்; ராகுல் குற்றச்சாட்டு


லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து மல்லையாவை தப்ப விட்டார் சி.பி.ஐ. இயக்குனர்; ராகுல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Sep 2018 10:09 AM GMT (Updated: 15 Sep 2018 10:09 AM GMT)

விஜய் மல்லையாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. இயக்குனர் ஏ.கே. சர்மா பலவீனம் அடைய செய்து அவரை தப்பி செல்ல வைத்து விட்டார் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவர் செல்வதற்கு முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து பேசியதாக சமீபத்தில் கூறி இருந்தார்.

இதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, மல்லையா தப்பி செல்வதற்கு மத்திய அரசு உதவியதாக குற்றம் சாட்டி வருகிறது. இந்த சந்திப்பை மறைத்த அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘லுக் அவுட் நோட்டீசை திருத்தியமைத்து, மல்லையா தப்பி செல்வதற்கு சி.பி.ஐ. உதவியிருக்கிறது. பிரதமருக்கு நேரடியாக அறிக்கை அளிக்கும் நிலையில் இருப்பவர்கள்தான் சி.பி.ஐ. அதிகாரிகள். 

அப்படியிருக்கையில், மல்லையா போன்ற பிரபலமான ஒருவர் தொடர்பாக வெளியிடப்பட்ட நோட்டீஸ், பிரதமரின் அனுமதியின்றி திருத்தப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி சமூக ஊடகமொன்றில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சி.பி.ஐ.யின் இணை இயக்குனரான ஏ.கே. சர்மா, விஜய் மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து உள்ளார்.  இது மல்லையா தப்பி செல்ல அனுமதித்து விட்டது.

பஞ்சாப் நேசனல் வங்கி பணமோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வகுத்த திட்டத்திற்கும் இந்த அதிகாரியே பொறுப்பு ஆவார்.  சி.பி.ஐ.யின் விசாரணை அதிர்ச்சி தருகிறது என தெரிவித்துள்ளார்.

Next Story