சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்


சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை - ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 16 Sep 2018 11:15 PM GMT (Updated: 16 Sep 2018 7:54 PM GMT)

சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி,

சிக்கிம் எல்லைக்கு அருகே சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கும் டோக்லாமில் சீன படைகள் மேற்கொண்ட சாலைப்பணிகளை கடந்த ஆண்டு இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், இரு நாடுகளும் அங்கு கூடுதல் படைகளை குவித்தன. இதனால் அங்கு போர்ப்பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப்பின், சுமார் 70 நாட்கள் நீடித்த இந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. இரு நாடுகளும் படைகளை அங்கிருந்து விலக்கிக்கொண்டன. எனினும் சீன எல்லையில் வழக்கத்தை விட கூடுதல் படைகளை இந்தியா தொடர்ந்து குவித்து கண்காணித்து வருகிறது.

டோக்லாம் பிரச்சினையை தொடர்ந்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. எனினும் சீன எல்லையில் இருந்து படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் கடந்த ஏப்ரல் மாதம் வூகன் நகரில் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் இருநாட்டு உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. இருநாடுகளும் தங்கள் எல்லையோர நிர்வாகம் குறித்தும், இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு குறித்தும் விரிவான முடிவு எடுத்துள்ளன. இந்த அமைதி நடவடிக்கைகள் பயன்தரும் என நம்புகிறேன்.

அதேநேரம் வூகன் பேச்சுவார்த்தை உத்வேகத்தை அளித்தாலும், ஒரு ராணுவ மந்திரியாக, நமது படைகளை உஷாராக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு உண்டு. நிச்சயமாக, சீன எல்லையில் இருந்து படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை.

இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டை பொறுத்தவரை, இரு நாடுகளும் எல்லையை நிர்ணயிக்காத பகுதிகள் ஏராளம் அங்கே இருக்கின்றன. இதனால் எல்லை விஷயத்தில் நாம் ஒரு கருத்து கொண்டிருந்தால், அவர்கள் மற்றொரு கருத்தை வைத்திருப்பார்கள். இதனால் அவ்வப்போது எல்லை பிரச்சினை உருவாகிறது.

இந்தியாவின் கவனத்தை மேற்கு எல்லையில் இருந்து வடக்கு எல்லைக்கு திருப்ப வேண்டிய காலம் வந்திருப்பதாக ராணுவ தளபதி கூறியிருக்கிறார். ஆனால் ஒரு எல்லையை மட்டும் பிரித்து கவனம் செலுத்த என்னால் முடியாது. எனது இரு எல்லைகள் குறித்தும் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதைப்போல நமது கடல் எல்லை குறித்தும் எச்சரிக்கையாக இருக்கிறேன். இந்த எல்லை குறித்து அதிகம் பேசுவது இல்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் தொடர்பாக ராணுவ அதிகாரிகளில் ஒரு பிரிவினர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி தங்கள் கருத்துகளை தெரிவித்து இருப்பதால், அவர்கள் மீது தனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.



Next Story