ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்


ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 17 Sep 2018 7:55 AM GMT (Updated: 17 Sep 2018 7:55 AM GMT)

டெல்லியில் ரயில்வே கேட்டை திறக்க மறுத்த கேட்மேனை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு டெல்லியில் உள்ள நரேலா பகுதியில், ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த ரயில்வே கிராசிங்கில் பதாக் (வயது 28) என்பவர் கேட்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, வழக்கம் போல் பணியை பார்த்துக்கொண்டிருந்தார். முரி எக்ஸ்பிரஸ் ரயில் வருகை தருவதை அறிந்த பதாக், ரயில்வே கேட்டை அடைத்தார். 

அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், ரயில்வே கேட்டை திறக்குமாறு பதாக்கை வற்புறுத்தினார். ஆனால், அவர் ரயில் விரைவில் வர இருப்பதால், தன்னால் கேட்டை திறக்க முடியாது என தெரிவித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் பதாக்கை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த பதாக் சம்பவ இடத்திலேயே நினைவின்றி விழுந்தார். இந்த கொடூர செயலை அரங்கேற்றிய மர்ம நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றனர். 

கழுத்து மற்றும் கால் பகுதியில் படுகாயம் அடைந்து இருந்த பதாக்கை அவ்வழியாக சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தற்போது டெல்லியில் ரோஹினி பகுதியில் உள்ள சரோஜ் மருத்துவமனையில் பதாக் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பெரிய அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பதாக் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story