“2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்பு” -மத்திய அமைச்சர் டுவிட்


“2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்பு” -மத்திய அமைச்சர் டுவிட்
x
தினத்தந்தி 17 Sep 2018 9:17 AM GMT (Updated: 17 Sep 2018 9:17 AM GMT)

“2047-ம் ஆண்டில் இந்தியா மீண்டும் ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்புள்ளது” என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பா.ஜனதா தலைவர் கிரிராஜ் சிங், “1947-ம் ஆண்டில் இந்தியா மத ரீதியிலான பிரிவினை எதிர்க்கொண்டது. மீண்டும் அதுபோன்ற ஒரு பிரிவினையை சந்திக்க வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். எந்தஒரு சமூகத்தின் பெயரையும் குறிப்பிடாமல் சிறப்புச் சட்டம் 35ஏ-ஐ குறிப்பிட்டு டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ள அவர் டுவிட்டர் பதிவில், “1947-ம் ஆண்டில் நடந்தது போன்று 2047-ம் ஆண்டிலும் இந்தியா மீண்டும் மதரீதியிலான பிரிவினையை எதிர்கொள்ளப் போகிறது. 

இந்தியாவில் கடந்த 72 ஆண்டுகளில் மக்கள் தொகை 33 கோடியில் இருந்து 135.7 கோடியாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை பெருக்கம் காரணமாக பல்வேறு பிரிவினைகள் உண்டாகும். ஏற்கெனவே சிறப்புச் சட்டம் 35ஏ குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் வரும் காலங்களில் பாரதம் என்று கூறுவது கடினமாகிவிடும்,” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், இந்தியா சுதந்திரம் பெற்ற போது மக்கள் தொகை 33 கோடிதான்.  இப்போது, 2018-ம் ஆண்டில் 135 கோடியாக உயர்ந்துவிட்டது. இருப்பினும் இந்துக்களின் அளவு கணிசமாகக் குறைந்துவிட்டது. 54 மாவட்டங்களில் இந்துக்கள் தொகை குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக சமத்துவம் மற்றும் மேம்பாட்டை கொண்டுவர இயலாது. மக்கள் தொகை விவகாரத்தை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பல நாடுகளில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கொள்கைகள் இருக்கின்றது.

இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல் இருக்கும் நிலையில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தனிக்கொள்கை வகுப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று விரும்பினால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கொள்கை அவசியமானது என கூறியுள்ளார்.

Next Story