பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்


பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டு வர வேண்டும் என  நான் விரும்புகிறேன்  மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:49 AM GMT (Updated: 17 Sep 2018 10:49 AM GMT)

பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல்-டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த 10-ந் தேதி நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இன்று  பெட்ரோல் விலை லிட்டர் ரூ.85.31 ஆகவும், டீசல் ரூ.78 ஆகவும் விற்பனையானது. பெட்ரோல் விலை 100 ரூபாயை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது. எக்காரணம் கொண்டும் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க மாட்டோம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. 

இதனையடுத்து,  ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக சமீபத்தில் அறிவித்தன. ராஜஸ்தான் அரசும் பெட்ரோல், டீசல் மீதான வாட்  வரியை குறைப்பதாக அறிவித்தது, இதனால் ரூ2.50 வரையில் விலை குறைக்கப்பட்டது. தற்போது  கர்நாடாகவில் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரி ரூ.2 குறைக்கப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி குமாரசாமி அறிவித்தார்.

இந்தநிலையில், இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியார்களிடம் கூறியதாவது:

பெட்ரோல்-டீசல் விலையை மற்ற மாநில அரசுகள்  குறைத்தது போல ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.  சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை கழித்துள்ளது. பெட்ரோல்-டீசல் ஜிஎஸ்டி-யின் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தான் இந்த முடிவை எடுக்க வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை விட மாநில அரசுகளுக்குத்தான்  வலிமை அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story