எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்; தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது -அமைச்சர் தங்கமணி


எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்; தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது -அமைச்சர் தங்கமணி
x
தினத்தந்தி 18 Sep 2018 8:18 AM GMT (Updated: 2018-09-18T13:48:26+05:30)

தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது என டெல்லியில் அமைச்சர் தங்கமணி பேட்டி அளித்தார்.

புதுடெல்லி

டெல்லி சென்ற தமிழக அமைச்சர் தங்கமணி இன்று  மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்தார். அப்போது அவர்
தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்க வலியுறுத்தினார்.

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மனு அளித்தபின் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்துக்கு தேவையான நிலக்கரியை தர மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியளித்துள்ளார். தமிழகத்துக்கு அனுப்பப்படும் நிலக்கரி வேகன்களின் எண்ணிக்கையை 20-ஆக அதிகரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய மின்வெட்டு இருப்பதாக பேசி வருகிறார்கள். தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மின்வெட்டு வராது. தமிழகத்தில் மின்வெட்டு என எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஒடிசாவில் ஏற்பட்ட மழை காரணமாகவே கடந்த வாரத்திற்கான நிலக்கரி கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது. வடசென்னையில் 3 நாட்களுக்கான நிலக்கரியும், தூத்துக்குடியில் 6 நாட்களுக்கான நிலக்கரியும் கையிருப்பு உள்ளது.

மழை காரணமாக மின்தேவை குறைந்திருப்பதால் மின்உற்பத்தியையும் குறைத்திருக்கிறோம். நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம், தினமும் நிலக்கரி அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story