தேசிய செய்திகள்

வங்கி மோசடி வழக்குகள்; முக்கிய புள்ளிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிடுமா? தேசியவாத காங்கிரஸ் கட்சி + "||" + NCP targets Centre over 'high profile' banking fraud cases

வங்கி மோசடி வழக்குகள்; முக்கிய புள்ளிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிடுமா? தேசியவாத காங்கிரஸ் கட்சி

வங்கி மோசடி வழக்குகள்; முக்கிய புள்ளிகளின் பட்டியலை மத்திய அரசு வெளியிடுமா? தேசியவாத காங்கிரஸ் கட்சி
வங்கி பணமோசடி வழக்குகளில் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட உள்ளதா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை,

கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் ஒன்றில், 56 அங்குலம் மார்பு கொண்ட ஒருவராலேயே நாடு சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க முடியும் என பிரதமர் மோடி பேசினார்.  இதனை அடுத்து பிரதமர் மோடி மற்றும் அவரது அரசை குறிப்பிடும் வகையில், 56 அங்குல மார்பு கொண்டவருக்கு சரத் பவார் தலைமையிலான கட்சியின் 56 கேள்விகள் என குறிப்பிட்டு அக்கட்சியினர் மத்திய அரசுக்கு கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து 2016ம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக ரகுராம் ராஜன் பதவி வகித்தார்.  அவர் வங்கி மோசடியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் வழக்குகள் அடங்கிய பட்டியல் ஒன்றை நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.

அதன்பின் நாடாளுமன்ற குழுவுக்கு இது பற்றி குறிப்பு ஒன்றையும் அவர் அனுப்பினார்.

இந்த பட்டியலில் மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா பெயர் இடம் பெற்றிருந்ததா? என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, தனஞ்செய் முண்டே மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் மத்திய அரசுக்கு தங்களது டுவிட்டர் வழியே கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுவரை வெளிநாட்டுக்கு தப்பியோடிய மோசடி நபர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? ரகுராம் ராஜனின் பட்டியலை வெளியிடும் நோக்கில் மத்திய அரசு உள்ளதா? என பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர மோடி, அருண் ஜெட்லி மற்றும் அமித் ஷா ஆகியோரது பெயரை குறிப்பிட்டு அவர்களிடம் தங்களது கேள்விகளை கேட்டுள்ளனர்.

அமலாக்க துறை தகவலின்படி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவிற்கு வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர்.

இதேபோன்று விஜய் மல்லையா, ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு தேசிய வங்கி ஒன்றில் கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்துவதற்கு பதிலாக இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார் என தெரிய வந்துள்ளது.  வங்கிகளில் பணமோசடி தொடர்புடைய வழக்குகள் ஒவ்வொன்றாக சமீபத்தில் வெளிவரும் நிலையில் ரகுராம் ராஜனின் அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.