செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


செம்மரம் வெட்டியதாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 10:30 PM GMT (Updated: 18 Sep 2018 8:31 PM GMT)

செம்மரம் வெட்டியதாக சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக தொழிலாளி காமராஜின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஸ்ரீகாளஹஸ்தி,

மலைப்பாதையில் ஆம்புலன்ஸ் வேன் நின்றுவிட்டதால் அவரது உடல் டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள கானமலை கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 53). கூலித்தொழிலாளியான இவரை, ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் கொல்லப்பள்ளி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக்கடத்தியதாக 1–ந்தேதி நள்ளிரவில் கடப்பா மாவட்டம் ரெயில்வே கோடூர் வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

அவரின் பிணத்தை ஸ்ரீகாளஹஸ்தி புறநகர் போலீசார் கைப்பற்றி, ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரியில், காமராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வருவதற்கு முன்பே பிரேத பரிசோதனை செய்து விட்டனர்.

காமராஜின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறி ஐதராபாத் ஐகோர்ட்டில் 6–ந்தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 7–ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதால், விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 12–ந்தேதி ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஸ்ரீகாளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் முன்னிலையில் காமராஜின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் அவரின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடலை குடும்பத்தினரும், உறவினர்களும் பெற்றுக்கொண்டனர். காமராஜ் உடலை அடக்கம் செய்வதற்காக கானமலை கிராமத்துக்கு ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் இலவசமாக அனுப்பி வைத்தனர்.

அந்த ஆம்புலன்ஸ் வேன் நேற்று முன்தினம் இரவு கானமலை கிராமத்தை நோக்கி சென்றபோது, 5 கிலோமீட்டருக்கு முன்பே, மலைப்பாதையில் ஏற முடியாமல் நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் அவரது உறவினர்கள் நீளமான தடியால் ‘டோலி’ கட்டி காமராஜின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர்.


Next Story