பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிபெண் வழங்குவதாக ஆசைகாட்டி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு 2 ஆசிரியர்கள் கைது


பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிபெண் வழங்குவதாக ஆசைகாட்டி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  2 ஆசிரியர்கள் கைது
x
தினத்தந்தி 19 Sep 2018 12:13 PM GMT (Updated: 19 Sep 2018 12:13 PM GMT)

மகாராஷ்டிராவில், பிளஸ் 2 தேர்வில் கூடுதல் மதிபெண் வழங்குவதாக ஆசைகாட்டி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மும்பை

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பஞ்சவடி பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பிரவீண் மற்றும் சச்சின். 
இவர்கள் இருவரும்  அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில், அந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். தாங்கள் சொல்வது போல நடந்தால் பிளஸ் 2 தேர்வில் மிக அதிகமான மதிப்பெண்கள் பெறலாம் எனக் கூறி மாணவிகளுக்கு ஆசை காட்டியுள்ளனர்.

வகுப்பறையிலும், பள்ளி வளாகத்திலும் அடிக்கடி தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் சிலர் ஆசிரியர்களின் பேச்சை மொபைல் போனில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. தங்கள் பெற்றோர்களிடமும் நடந்த விவரங்களை மாணவிகள் கூறினர். இதையடுத்து கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியர்களின் அத்துமீறல்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். மேலும் சில பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து இரண்டு ஆசிரியர்களும் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவு குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் செய்த அத்துமீறல்கள் ஆதாரங்களுடன் தெரிய வந்ததையடுத்து, அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவர்கள் இருவரும் 2015-ம் ஆண்டிலும், இதேபோன்று பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தருவதாக கூறி மாணவிகளுக்கு வலை விரித்தது தற்போது தெரிய வந்துள்ளது. அப்போது மாணவிகள் இந்த விவகாரத்தை வெளியே சொல்ல பயந்ததால் அவர்களின் அத்து மீறல் தொடர்ந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

Next Story