மும்பையில் ரெயிலில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் கைது


மும்பையில் ரெயிலில் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2018 9:20 AM GMT (Updated: 2018-09-20T14:50:40+05:30)

மும்பையில் பயணிகள் ரெயிலில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பையில் புகழ் பெற்ற ஆராய்ச்சி மையம் ஒன்றில் மணிப்பூரை சேர்ந்த 22 வயது மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார்.  கடந்த 11ந்தேதி ஐரோப்பிய நாட்டை சேர்ந்த சக மாணவருடன் வஷி மற்றும் கோவண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரெயில் ஒன்றில் அந்த மாணவி பொது பெட்டி ஒன்றில் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில் ரெயிலில் கூட்ட நெருக்கடி ஏற்பட்டது.  இதனை பயன்படுத்தி அயாஸ் சட்டார் குரேஷி (வயது 26) என்ற வாலிபர் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

அவரை பிடிக்க மாணவியும் அவருடன் வந்த சக மாணவரும் முயற்சித்துள்ளனர்.  இந்த சம்பவத்தினை கண்ட மற்ற பயணிகள் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர்.  இதனை பயன்படுத்தி அந்த நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அந்த மாணவி குரேஷியை புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.  இதனை வைத்தும் பல்வேறு ரெயில் நிலையங்களிலும் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் புகைப்படங்களை ஆய்வு செய்தும் தப்பியோடிய குரேஷியை போலீசார் கைது செய்துள்ளனர்.


Next Story