இரவு விருந்தில் கூச்சல் போட்டு இடையூறு: தட்டி கேட்ட பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் தொந்தரவு; 5 பேர் கைது


இரவு விருந்தில் கூச்சல் போட்டு இடையூறு:  தட்டி கேட்ட பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் தொந்தரவு; 5 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sep 2018 11:37 AM GMT (Updated: 22 Sep 2018 11:37 AM GMT)

அரியானாவில் இரவு விருந்தில் சத்தம் போட்டு இடையூறு செய்தவர்களை தட்டி கேட்ட பெண் ஐ.டி. ஊழியரிடம் பாலியல் தொந்தரவு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

குர்காவன்,

அரியானாவில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 21 வயது இளம்பெண் ஊழியர் ஒருவர் பணிமுடிந்து இரவு 10 மணியளவில் வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார்.

அவர் தனது குடியிருப்பின் 2வது தளத்திற்கு படி வழியே ஏறி சென்றுள்ளார்.  ஆனால் முதல் தளத்தில் இருந்த சில வாலிபர்கள் இரவு விருந்து ஒன்றில் கூச்சல் போட்டு அருகேயுள்ள குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு செய்தவாறு இருந்துள்ளனர்.

இதனால் அவர்களிடம் இதுபற்றி கேட்பதற்காக இளம்பெண் சென்றுள்ளார்.  அவரது டிபன் பாக்ஸ் கீழே விழுந்தது.  அந்த சத்தம் கேட்டு அவர்கள் திரும்பியுள்ளனர்.  அவர்களில் ஒருவர் வெளியே வந்து இளம்பெண்ணை உள்ளே இழுக்க முயன்றார்.  ஆனால் அவர்களிடம் இருந்து தப்பி வெளியே ஓடி தனது வீட்டிற்கு சென்ற அவர் பெற்றோர்களிடம் நடந்தவற்றை கூறினார்.  அவர்கள் மற்ற குடியிருப்புவாசிகளிடம் இதனை தெரிவித்து உள்ளனர்.

இதனை அடுத்து அருகே இருந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்கு சென்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ய அவர்களை வாலிபர்கள் அடித்து திட்டியுள்ளனர்.

இதனிடையே அங்கு வாகனத்தில் வந்த காவல் துறையினர் முகேஷ், அபிஷேக், சவான், அங்கித் மற்றும் சச்சின் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.  ஹேமந்த் மற்றும் கமல் ஆகிய 2 பேர் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை தொடர்ந்து 7 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story