கற்பழிப்பு புகார் : பேராயர் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்.6 வரை நீட்டித்து உத்தரவு


கற்பழிப்பு புகார் :  பேராயர் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்.6 வரை நீட்டித்து உத்தரவு
x
தினத்தந்தி 24 Sep 2018 8:18 AM GMT (Updated: 24 Sep 2018 8:18 AM GMT)

கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு நீதிமன்ற காவலை அக்.6 வரை நீட்டித்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காட்டில் உள்ள ஒரு அருட்கன்னியர் மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் (வயது 54) மீது கற்பழிப்பு புகார் அளித்தார். பிராங்கோ மூலக்கல் கோட்டயம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது, கடந்த 2014–ம் ஆண்டு முதல் 2016 வரை தன்னை பலமுறை கற்பழித்ததாக அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை விசாரணை நடத்தி வரும் வைக்கம் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வுப்படையினர், பேராயர் மூலக்கல்லை கடந்த 19–ந் தேதி விசாரணைக்கு அழைத்தனர். தொடர்ந்து 3 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் 21–ந் தேதி இரவில் அவரை கைது செய்தனர்.

பின்னர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர்.

இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவருக்கு 2 நாள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில்,  பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று  மதியத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முன்னாள் பிஷப் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்.6 வரை நீட்டித்து  உத்தரவிட்டது.

உடனே அவரை காவலில் எடுத்த போலீசார், கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக,  கேரள உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிஷப் பிராங்கோ ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிராங்கோவின் மனு பிற்பகல்  விசாரிக்கப்பட உள்ளது. கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story