இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்குவதே காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் நோக்கம்; பா.ஜ.க. குற்றச்சாட்டு


இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்குவதே காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானின் நோக்கம்; பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Sep 2018 11:12 AM GMT (Updated: 24 Sep 2018 11:12 AM GMT)

இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை நீக்குவதே காங்கிரஸ் கட்சி மற்றும் பாகிஸ்தானின் நோக்கம் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீரில் 3 போலீஸ்காரர்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.  இதனை அடுத்து அந்நாட்டுடன் இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த வெளியுறவு துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது என இந்தியா அறிவித்தது.

இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் முன்னாள் மந்திரிகள் பிரதமர் மோடியை தாக்கும் வகையில் டுவிட்டரில் செய்தி வெளியிட்டனர்.  இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பு நிர்வாகி சம்பீத் பத்ரா இதுபற்றி கூறும்பொழுது, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அவர்கள் பிரசாரம் செய்கின்றனர் என கூறியுள்ளார்.

இந்தியாவில் ராகுல் பெரிய தலைவராக வர சிலர் விரும்புகின்றனர்.  யார் அவர்கள்? அவர்கள் பாகிஸ்தானிய தலைவர்கள்.  அவர்கள் ஊழல், வாரிசு மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலின் பக்கம் நிற்கிறார்கள்.

பிரதமர் மோடிக்கு ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுமக்கள் ஆதரவு உள்ளது.  ஒருவரும் அவரை நீக்க முடியாது.

பிரதமர் மோடியால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தானுக்கு, இந்திய அரசியலில் இருந்து பிரதமர் மோடியை எந்த வழியிலாவது நீக்கி விடுவது என்பதே ஒரே நோக்கம் ஆக உள்ளது என கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் கருத்துகளை தெரிவிப்பது என்பது முக்கியம்.  ஆனாலும் அவற்றில் கண்ணியம் இருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு வேலையும் இல்லை, தலைவலி இல்லை என இருந்தது என்றும் பிரதமர் மோடியின் கொள்கை எப்பொழுதும் வேலை, ஓய்வில்லை என்று உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story