ஆந்திராவில், தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது, பெண் மாவோயிஸ்டு தலைமையிலான குழு - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


ஆந்திராவில், தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்றது, பெண் மாவோயிஸ்டு தலைமையிலான குழு - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 24 Sep 2018 10:45 PM GMT (Updated: 24 Sep 2018 8:09 PM GMT)

ஆந்திராவில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.வை சுட்டுக் கொன்றவர்கள் பெண் மாவோயிஸ்டு தலைமையில் வந்த குழுவினர் என்னும் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

விசாகப்பட்டினம்,

ஆந்திர மாநிலம் அரகு தொகுதி தெலுங்கு தேச எம்.எல்.ஏ. கிடாரி சர்வேஸ்வரா ராவ் மற்றும் தெலுங்கு தேச முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோர் தங்களது தொகுதியில் நேற்று முன்தினம் கிராம மக்களை சந்திக்கச் சென்றனர். அப்போது லிப்பிடிபுட்டா என்ற கிராமத்தில் மக்களோடு மக்களாக கூடியிருந்த மாவோயிஸ்டுகள் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இத் தாக்குதலில் ஆந்திரா- ஒடிசா எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டு அமைப்பினர் ஈடுபட்டு உள்ளதும், இந்த குழுவிற்கு பெண் மாவோயிஸ்டு ஒருவரே தலைமை தாங்கி வந்துள்ளதும் போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எம்.எல்.ஏ.வை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஆந்திரா- ஒடிசா மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த தாக்குதல் குறித்த முக்கிய துப்பு எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. போலீசின் முதற்கட்ட விசாரணையில் தெலுங்கு தேச தலைவர்களை சுட்டுக் கொன்றது, அருணா என்ற பெண் மாவோயிஸ்டு தலைமையில் வந்த குழுவினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இவருடைய குழுவில் 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் உள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட பெண் மாவோயிஸ்டுகள் அனைவருமே 20-25 வயதுக்கு உட்பட்டோர் ஆவர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பே இவர்கள் அரகு பகுதிக்கு வந்து கிடாரி சர்வேஸ்வரா ராவ், சிவேரி சோமா ஆகியோரை கொலை செய்வதற்கான ஒத்திகையை நடத்தி இருக்கின்றனர். அதன்படி தங்களது சதித் திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஆந்திரா-ஒடிசா எல்லையில் செயல்படும் மாவோயிஸ்டு அமைப்பின் செயலாளர் ராமகிருஷ்ணாவும் அவருடைய உதவியாளர்களும் என்று சந்தேகிக்கிறோம்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விரைவில் அருணா தலைமையிலான மாவோயிஸ்டுகள் குழுவினரை பிடித்துவிடுவோம் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மாவோயிஸ்டு களால் சுட்டுக்கொல்லப்பட்ட கிடாரி சர்வேஸ்வர ராவின் உடல் விசாகப்பட்டினத்தில் தகனம் செய்யப்பட்டது. சிவேரி சோமாவின் உடல் அங்குள்ள படேரு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story