மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் தேவை: ராணுவ தளபதி கருத்து


மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் தேவை: ராணுவ தளபதி கருத்து
x
தினத்தந்தி 25 Sep 2018 2:34 AM GMT (Updated: 25 Sep 2018 2:42 AM GMT)

மீண்டும் ஒரு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்த வேண்டிய தேவை உள்ளதாக ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ராணுவ வீரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் மாதம் எல்லையை கடந்து சென்று பயங்கரவாத முகாம்கள் மீது  தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சர்ஜிக்கல் தாக்குதல் என இந்த தாக்குதல் அழைக்கப்பட்டது.

எல்லைக் கட்டுப்பாடு கோட்டு பகுதியில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது மீண்டும் சர்ஜிக்கல் (துல்லியத்) தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என்று தாம் நம்புவதாக இந்திய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் வார பத்திரிகை ஒன்றுக்கு விபின் ராவத் பேட்டியளிக்கும்போது, மீண்டும் துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாக நம்புகிறீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்ததாவது: மேலும் ஒரு துல்லியத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நம்புகிறேன். இதை எப்படி செயல்படுத்த நாங்கள் விரும்புகிறோம் என்ற விவரத்தை வெளியிட விரும்பவில்லை.

பாகிஸ்தானால் எல்லையில் சண்டை நிறுத்தத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பிறகும், எல்லைக்கு அப்பால் இருந்து பயங்கரவாதிகள் அதிகளவில் ஊடுருவி வருகின்றனர். இதுபோல் எல்லையில் ஊடுருவல் தொடர்வதை அனுமதிக்க முடியாது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் முயற்சியை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.

Next Story