ரபேல் ஒப்பந்தம் ‘வேடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது, விஷயங்கள் மேலும் சுவாரஸ்யமாகும்’ ராகுல் காந்தி


ரபேல் ஒப்பந்தம் ‘வேடிக்கை இப்போதுதான் தொடங்கியுள்ளது, விஷயங்கள் மேலும் சுவாரஸ்யமாகும்’ ராகுல் காந்தி
x
தினத்தந்தி 25 Sep 2018 9:09 AM GMT (Updated: 25 Sep 2018 10:36 AM GMT)

ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம், மேலும் விஷயங்கள் வெளியாகும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

அமேதி,

 ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மட்டுமே இந்திய அரசு சிபாரிசு செய்தது என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா இடையே கடும் வார்த்தை போர் நீடிக்கிறது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் கட்சி உறுப்பினர்களுடன் சிறப்பு உரையாடலை மேற்கொண்டார். மீடியாக்களுக்கு அனுமதி கிடையாத இந்த கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. 

இதில் ராகுல் காந்தி பேசிய வீடியோவை அங்கிருந்த தொண்டர்களில் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் பேசும் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ஊழலை ஒழிப்பதற்காக ஆட்சிக்கு வந்தார், இப்போது அவரே ரூ. 30 ஆயிரம் கோடியை அம்பானிக்கு கொடுத்துள்ளார். இப்போதுதான் வேடிக்கை தொடங்கியுள்ளது, விஷயங்கள் மேலும் சுவாரஸ்யமாகும். விஜய் மல்லையா, ரபேல் விமானம், லலித் மோடி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி ஆகிய விவகாரங்களில் மோடியின் பணியை நாங்கள் காட்டும் போது உங்களுக்கு மேலும் வேடிக்கையுள்ளது. இவையனைத்தும் திருட்டுதான். பிரதமர் மோடி பாதுகாவலர் கிடையாது, கொள்ளையர் என்பதை ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவருவோம்,” என்கிறார்.
 
ஏற்கனவே ரபேல் விவகாரம் தொடர்பாக இருகட்சிகளும் அணல் தெறிக்க பேசும் நிலையில் ராகுலில் இப்பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகியுள்ளது. 

பா.ஜனதா பதிலடி

பா.ஜனதா தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “ராகுல் காந்தி போன்ற ஒரு பொறுப்பற்றவரை, பொய்யரை தலைவராக கொண்டுள்ள காங்கிரசுக்கு இதுஒரு அவமானமாகும். ஊழலில் மூழ்கியுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவரிடம் இருந்து வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது. சுதந்திர இந்திய வரலாற்றில் பிரதமருக்கு எதிராக இதுபோன்ற ஒருகருத்தை தேசிய தலைவர் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம்,” என கூறியுள்ளார்.

Next Story