ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே,சிறு திருத்தங்கள் சுப்ரீம் கோர்ட் அறிவுரை


ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே,சிறு திருத்தங்கள்  சுப்ரீம் கோர்ட் அறிவுரை
x
தினத்தந்தி 26 Sep 2018 5:59 AM GMT (Updated: 26 Sep 2018 5:59 AM GMT)

ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. போலியாக ஆதாரை உருவாக்க முடியாது சிறு திருத்தங்கள் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது. #Aadhaar


புதுடெல்லி,

ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.

அந்த விவகாரத்தை தனியாக விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிமனித சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின் அடிப்படையில் கருவிழி உள்ளிட்டவற்றை பகிர்வது தனிநபரின் அடிப்படை உரிமையை மீறும் செயலா? என்பது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். அதன் அடிப்படையில் ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசை அனுமதிப்பதா? இல்லையா? என்று முடிவு செய்யலாம் என்றும் 9 நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

பின்னர் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

வாரம் 3 நாள் விசாரணை என்ற அடிப்படையில் 38 நாட்கள் தொடர் விசாரணை நடந்தது. கடந்த மே மாதம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் ஆகியோர் நீதிபதி ஏ.கே.சிக்ரி கருத்தில் உடன்பாடு

நீதிபதி ஏ கே சிக்ரி 3 நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தார். அதன் முக்கிய அமசங்கள் வருமாறு:-

சிறந்ததாக இருப்பதை விட தனித்துவமாக இருப்பதே மேல் கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருக்கிறது ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . எந்த வகையிலும் ஆதார் எண்ணை போலியாக உருவாக்க முடியாது.

ஆதார் அடையாள அட்டைக்கும் மற்ற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்கள் போன்றது அல்ல.

தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்சினையாக உள்ளது. குறைந்த அத்தியாவசிய தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது.

ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. தனித்துவ அடையாளம் என்பது ஏழை மக்களுக்கு  அதிகாரமளிக்கும்.ஒதுக்கப்பட்டவர்களுக்கும் அடையாளம் கொடுத்தது ஆதார்.

ஆதார் ஒருவரின் கையெழுத்தை கூட மாற்றலாம்; ஆனால் கைரேகையை மாற்ற முடியாது.

ஆதார் அட்டை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது.  போலியாக ஆதாரை உருவாக்க முடியாது  சிறு திருத்தங்கள் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுரை

ஆதாருக்கான சட்ட விதிகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் தனி மனித கண்ணியம் காக்கப்படும்.

தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை கோருவது சட்டவிரோதம்.

Next Story