மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கி தருகிறோம்; 200 மாணவர்களிடம் ரூ.25 கோடி மோசடி செய்த கும்பல் கைது


மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கி தருகிறோம்; 200 மாணவர்களிடம் ரூ.25 கோடி மோசடி செய்த கும்பல் கைது
x
தினத்தந்தி 29 Sep 2018 1:18 PM GMT (Updated: 29 Sep 2018 1:18 PM GMT)

வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் இடம் வாங்கி தருகிறோம் என கூறி 200 மாணவர்களிடம் ரூ.25 கோடி மோசடி செய்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டது.

பெங்களூரு,

ஆந்திர பிரதேசத்தில் கும்பல் ஒன்று அமெரிக்கன் சேவை மையம் என்ற பெயரில் ஆலோசனை மையம் ஒன்றை தொடங்கியது.  அதன்பின் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பு படிக்க ஆர்வமுடன் உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டுள்ளது.

அவர்களிடம் இருந்து தலா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பெற்று கொண்டு சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வர்.  அதன்பின் வெளிநாட்டு பல்கலை கழகங்களுக்கு கட்டணம் எதுவும் செலுத்திடாமல் அவர்களை அங்கேயே விட்டு விட்டு தப்பி விடுவர்.

இவர்களுக்கு இதே பெயரில் பெங்களூரு, சென்னை, ஐதராபாத், திருப்பதி மற்றும் கோவை ஆகிய இடங்களில் கிளைகள் இருந்துள்ளன.

இதுபற்றி சென்னை போலீசில் மோசடி வழக்கு பதிவான பின்னர் வேறு பெயரில் இந்த கும்பல் ஆலோசனை மையத்தினை நடத்தி வந்துள்ளது.

சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது.  இதன்மீதும் மோசடி வழக்குகள் பதிவான நிலையில் இந்த கும்பல் அலுவலகங்களை மூடி விட்டு சில காலம் கழித்து வேறொரு பெயரில் (டாக்டர் வார்டு அண்ட் யூகான் எஜுகேசன்) பல்வேறு இடங்களில் ஆலோசனை மையத்தினை நடத்த தொடங்கியுள்ளது.

இந்த மோசடியில் முக்கிய புள்ளிகளான கோபி வெங்கடராவ், அவரது மனைவி நிகிலா மற்றும் ஜமீர் ஆகியோர் தப்பி சென்று வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்கள் சுமன், திலீப், ஏடுகொண்டலா (ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்தவர்கள்), ஆயிஷ்பானு, ரங்கா மற்றும் பாஷா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.


Next Story