புதுச்சேரியில் அரசு விழாவில் ஆளுநர் - அ.தி.மு.க எம்.எல்.ஏ இடையே கடும் வாக்குவாதம்


புதுச்சேரியில் அரசு விழாவில் ஆளுநர்  - அ.தி.மு.க எம்.எல்.ஏ இடையே கடும் வாக்குவாதம்
x

புதுச்சேரியில் நடைபெற்ற அரசு விழாவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியுடன், அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு, எம்எல்ஏ வெளிநடப்பு.

புதுச்சேரி

புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் விழா, மறைமலை அடிகள் சாலையில் உள்ள கம்பன் கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு விழா நடைபெற்ற இடம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்டது என்பதால், அத்தொகுதி எம்எல்ஏ அன்பழகனும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசும்போது, புதுச்சேரி அரசை கடுமையாக குறைகூறிப் பேசினார்.

புதுச்சேரியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநிலமாக அறிவிக்கும் நிலையில், தனது தொகுதியில் குப்பைத் தொட்டி வசதிகள் கூட சரிவர செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி பேசிக் கொண்டிருந்தார். அரசு விழா என்பதால் நேரத்தை கடைப்பிடித்து பேச்சை முடிக்குமாறு கிரண்பேடி கூறினார். எம்எல்ஏ அன்பழகன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் அருகில் சென்று பேச்சை முடிக்குமாறு கிரண்பேடி வலியுறுத்தினார். இருவருக்கும் லேசான வாக்குவாதம் ஏற்பட்டபோது மைக் ஆப் செய்யபட்டது இதனால் அன்பழகன் கோபம் அடைந்தார்.

இதற்கு எம்எல்ஏ அன்பழகன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து வாக்குவாதம் முற்றியது. மேடையிலிருந்து செல்லுமாறு கிரண்பேடி கூறியபோது, கிரண்பேடி அங்கிருந்து செல்லுமாறு பதிலுக்கு எம்எல்ஏ அன்பழகன் கூறினார். மீண்டும் இருகரம் கூப்பி கிரண்பேடி கூறியபோது எம்எல்ஏ அன்பழகனும் இருகரம் கூப்பி நீங்கள் செல்லுங்கள் என்றார்.

பின்னர் மேடையில் இருந்து இறங்கிச் சென்ற எம்எல்ஏ அன்பழகன், செய்தியாளர்களிடம் பேசும்போது, கிரண்பேடியின் செயல் அநாகரீகமானது என்றார். மைக்கை ஆப் செய்யும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான தன்னை, கொல்லைப்புறமாக ஆளுநர் பொறுப்புக்கு வந்த கிரண்பேடி அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆனால், அரசு விழாவில் நேர மேலாண்மையை கடைப்பிடிக்குமாறு தாம் வலியுறுத்தியதாகவும், அதிமுக எம்எல்ஏ அன்பழகனை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.

Next Story