குறைகளை தெரிவிக்க விவசாயிகள்கூட டெல்லிக்குள் வரமுடியாது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்


குறைகளை தெரிவிக்க விவசாயிகள்கூட டெல்லிக்குள் வரமுடியாது - மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 2 Oct 2018 10:31 AM GMT (Updated: 2 Oct 2018 10:31 AM GMT)

தங்களுடைய குறைகளை தெரிவிக்க விவசாயிகள்கூட டெல்லிக்குள் வரமுடியாது என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.


புதுடெல்லி,

விவசாய விளைப்பொருட்களுக்கு நியாயமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, மின்சார கட்டண குறைப்பு, பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாகவந்த உத்தரகாண்ட் மாநில விவசாயிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். டெல்லிக்குள் விவசாயிகளை அனுமதிக்க மறுத்து போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டை வீசியதாலும் டெல்லி-உ.பி.எல்லை போர்க்களமானது. மத்திய அரசின் இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அனைத்துலக வன்முறையற்ற நாளில் பா.ஜனதா விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்குகிறது என விமர்சனம் செய்துள்ளார் ராகுல் காந்தி.

இதுதொடர்பாக டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “அனைத்துலக வன்முறையற்ற நாளில், டெல்லிக்கு அமைதியான முறையில் வந்த விவசாயிகளை கொடூரமான முறையில் தாக்கி பா.ஜனதா காந்தி ஜெயந்தியை கொண்டாடுகிறது. இப்போது தங்களுடைய குறையை தெரிவிக்க விவசாயிகள்கூட டெல்லிக்கு வரமுடியாது,” என்று கூறியுள்ளார். விவசாயிகள் டெல்லிக்குள் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவை பிறப்பித்த போலீஸ், விவசாயிகளை அனுமதிக்கவில்லை.

Next Story