மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடந்த காங்கிரஸ் முடிவு


மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடந்த காங்கிரஸ் முடிவு
x
தினத்தந்தி 2 Oct 2018 9:09 PM IST (Updated: 2 Oct 2018 9:09 PM IST)
t-max-icont-min-icon

மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நேரம் என காங்கிரஸ் கூறியுள்ளது.


வார்தா, 

 
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி மராட்டிய மாநிலம் வார்தாவில் உள்ள காந்தி சேவாசிரமத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் இன்று வருகை தந்தனர்.

 அங்கு நடந்த பிரார்த்தனை கூட்டம் மற்றும் 'காந்தி சங்கல்ப யாத்திரை’ என்ற அமைதி பேரணியில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

  காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மோடி அரசுக்கு எதிராக 2-வது சுதந்திர போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய சிந்தனைக்கும், அதன் ஆன்மாவுக்கும், உடலுக்கும் மகாத்மா காந்தி ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்ற கோஷத்தை எழுப்பினார். அது, வெறும் கோஷம் கிடையாது, வாழ்க்கை முறையாகும். மோடி அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராக உள்ளது. 

வெறுப்பு, வன்முறை, பழிவாங்குதல், அச்சுறுத்தல், பிரித்தாளுதல், ஆரோக்கியமான விவாதத்தையும், மாற்றுக்கருத்தையும் நசுக்குதல் ஆகியவை கலந்த அரசியலை நடத்தி வருகிறது. அந்த அரசுக்கு எதிராக 2வது சுதந்திர போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. 
காந்தியையும், அவரது சிந்தனைகளையும் சீர்குலைத்தவர்கள், இப்போது காந்தியின் சீடர்கள் போல் வேடம் போடுகிறார்கள். அவர்கள், காந்தியின் மூக்குக்கண்ணாடியை விளம்பர பிரசாரத்துக்காக வாங்கலாம். ஆனால், அவர்களின் இட்டை வேடத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தும் என்று கூறினார். 

குறைகளை தீர்ப்பது தொடர்பாக டெல்லிக்கு வந்த விவசாயிகளுக்கு எதிராக தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளது.  இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடி அதிகார போதையில் மிதக்கிறார். எங்களுடைய ஆதரவு விவசாயிகளுக்கு எப்போதும் உண்டு. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 


Next Story