நர்மதை நதியில் ராகுல்காந்தி வழிபாடு


நர்மதை நதியில் ராகுல்காந்தி வழிபாடு
x
தினத்தந்தி 6 Oct 2018 11:30 PM GMT (Updated: 6 Oct 2018 8:59 PM GMT)

நர்மதை நதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

ஜபல்பூர்,

இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாக நர்மதை கருதப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் இந்த நதியின் மலையையொட்டிய பகுதிகளில் பக்தர்கள் புனித நடைபயணம் மேற்கொண்டு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். கடந்த மாதம் இதுபோன்ற நடைபயணத்தை காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் மேற்கொண்டார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று விமானம் மூலம் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகருக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் நர்மதை நதிக்கு வழிபாடு நடத்தப்படும் உமா காட் என்ற பகுதிக்கு சென்றார்.

அங்கு ராகுல்காந்தி ஆரத்தி எடுத்து நர்மதை நதியை வழிபட்டார். அப்போது காங்கிரஸ் தொண்டர்கள் ‘நர்மதையின் பக்தர் வாழ்க’ என்று உற்சாகமாக கோ‌ஷமிட்டனர்.

பின்னர் மேடையில் அலங்கரித்து உட்கார வைக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு ராகுல்காந்தி பரிசு வழங்கினார். இதையடுத்து அங்குள்ள ஒரு சதுக்கத்தில் இருந்து தனது 8 கி.மீட்டர் தூர பயணத்தை தொடங்கினார். வேனில் சாலை வழியாக சென்ற அவர் வழி நெடுக பொதுமக்களையும், காங்கிரஸ் தொண்டர்களையும் சந்தித்தார். அவருடைய பயணம் ஜபல்பூரில் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து ஜபல்பூர் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.

ராகுல்காந்தி மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் அந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


Next Story