ஓட்டு வங்கி அரசியலை காங்கிரஸ் கையாளுகிறது : ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி ஆவேச தாக்கு


ஓட்டு வங்கி அரசியலை காங்கிரஸ் கையாளுகிறது : ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி ஆவேச தாக்கு
x
தினத்தந்தி 7 Oct 2018 12:00 AM GMT (Updated: 6 Oct 2018 9:05 PM GMT)

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஓட்டு வங்கி அரசியலை காங்கிரஸ் கையாளுகிறது என்று பிரதமர் மோடி ஆவேசமாக தாக்கினார்.


அஜ்மீர்,

ராஜஸ்தானில், சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி வசுந்தரா ராஜேசிந்தியா, மாநிலம் தழுவிய அரசியல் யாத்திரை மேற்கொண்டார்.

இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி அஜ்மீர் நகரில் நேற்று மதியம் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியபோது காங்கிரசை ஆவேசமாக தாக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆரோக்கியமான ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி மிகவும் அவசியம். ஆனால் நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும் அதில் தோல்வி கண்டவர்களை நாம் எதிர்க்கட்சியாக கொண்டிருக்கிறோம். தற்போது அவர்கள் எதிர்க்கட்சி என்பதிலும் தோல்வி அடைந்து விட்டனர். உண்மையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏன் தயங்குகிறது?... அவர்கள் ஏன் பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் கூறுகிறார்கள்?...

எதிர்க்கட்சியிடம்(காங்கிரஸ்), ஆட்சியில் இருந்தபோது நீங்களும், நாங்களும் நிறைவேற்றிய திட்டங்களின் அடிப்படையில் விவாதம் நடத்துவோம் என்று கூறுகிறேன். அது மின்வசதியை ஏற்படுத்தித் தந்தது, சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தது, ரெயில்பாதைகள் நிறுவியது என எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அதுபற்றி விவாதிப்போம் என்கிறோம். ஆனால் இதுபோன்ற விவாதத்தை விரும்பாமல் காங்கிரஸ் பயந்து ஓடுகிறது.

மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியலையும், மக்களிடையே பிளவு படுத்தும் சூழ்ச்சியையும் கையாளுகிறது. அவர்களது 60 ஆண்டு கால ஆட்சியில் இதுதான் நடந்துள்ளது.

அவர்கள் பதவியில் இருந்தபோது, இடைத்தரகர்கள் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொண்டனர். அவர்கள் விரும்பும் உறவினர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன.

இதனால் அரசு நிர்வாகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பட்ஜெட்டை தங்களுடைய ஓட்டு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. இதனால்தான் நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படாமல் போனது. ராஜஸ்தானிலும் முன்பு இதுதான் நடந்தது. எனவே காங்கிரசை மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக்கூடாது.

2 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நமது ராணுவம் அதிரடியாக நுழைந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து பெருமை கொள்ளாத இந்தியர்களே கிடையாது. ஆனால் நமது வீரர்களின் தாக்குதல் பற்றி எதிர்க்கட்சிகள் இன்னும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புகின்றன. காங்கிரஸ் இன்னும் ஒருபடி மேலேபோய் நமது ராணுவ வீரர்களை கேலி செய்கிறது.

ராஜஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் செய்திட்ட சாதனைகள் குறித்து முதல்-மந்திரி வசுந்தரா ராஜேசிந்தியா இங்கே பட்டியலிட்டார். எனவே, ராஜஸ்தான் மக்களின் முதல் கடமை மீண்டும் மாநிலத்தில் பா.ஜனதா அரசை தேர்ந்தெடுக்க ஓட்டளிக்கவேண்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story