சத்தீஷ்கார், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா : 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு


சத்தீஷ்கார், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா : 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2018 12:15 AM GMT (Updated: 6 Oct 2018 9:12 PM GMT)

சத்தீஷ்கார், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதை தேர்தல் கமிஷன் தள்ளிவைத்து இருக்கிறது.


புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபைகளின் ஆயுள்காலம் விரைவில் முடிகிறது.

இந்த 4 மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்னோடியாக ஒரு மினி பொதுத்தேர்தல் போல அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கிடையே சற்றும் எதிர்பாராத வகையில், தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங் கானா ராஷ்டீர சமிதி அரசு சட்டசபையை கலைத்து திடீர் தேர்தல் நடத்த முடிவு செய்தது. அதன்படி கடந்த மாதம் அந்த மாநில சட்டசபை கலைக்கப்பட்டது.

எனவே மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் மாநிலங்களுடன், தெலுங்கானா மாநிலத்திலும் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு எடுத்தது.

இந்த நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று நிருபர்களை சந்தித்து 5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

230 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்ட சபைக்கும், 40 இடங்களைக் கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந் தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

200 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும், 119 இடங்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும் ஒரே கட்டமாக டிசம்பர் மாதம் 7-ந் தேதி தேர்தல் நடத்தப்படும்.

90 இடங்களைக் கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி மற்றும் 20-ந் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 2 மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதியும் தொடங்குகிறது.

சத்தீஷ்கார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வரும் 16-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வரும் 26-ந் தேதியும் தொடங்குகிறது.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவாகிற ஓட்டுகள் ஒரே நாளில், டிசம்பர் மாதம் 11-ந் தேதி எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.

இந்த 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களிலும் நேற்றும், தெலுங்கானாவில் சட்டசபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்தும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதாகவும் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார்.

இந்த மாநிலங்களில் எந்த நலத்திட்டங்களையும், சிறப்பு அறிவிப்புகளையும் தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் வெளியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இதே போன்று திருவாரூர் தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.

இந்த தொகுதிகளுக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலுடன் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, மற்றொரு நாளில் இது அறிவிக்கப்படும்” என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியைப் பொறுத்தமட்டில், கடந்த இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதாலும், தற்போது அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இது தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுக்கு அச்சாரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நடைபெறுகிறது. சிவராஜ் சவுகான் தொடர்ந்து இரு முறை முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இங்கு ஆட்சியை தக்க வைக்க பாரதீய ஜனதா கட்சியும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் கடுமையாக முயற்சிக்கும்.

சத்தீஷ்காரில் 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ராமன்சிங் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. முன்னாள் காங்கிரஸ் முதல்-மந்திரி அஜித் ஜோகி, சத்தீஷ்கார் ஜனதா காங்கிரஸ் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி களம் காண்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு ஏறத்தாழ 25 ஆண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

மிசோரமில் லால் தன்ஹாவ்லா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசும், மிசோ தேசிய முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.

தெலுங்கானா மாநிலம் உருவான பின்னர் முதலாவது முதல்-மந்திரியாக தெலுங்கானா ராஷ்டீர சமிதியின் சந்திரசேகரராவ் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் சந்திக்கிற 2-வது சட்டசபை தேர்தல் இது. அங்கு அவருக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

மழை காலத்தில் இடைத்தேர்தல் நடந்ததே இல்லையா? பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்திய தேர்தல் ஆணையமோ, “மழை காலம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், தமிழகத்தில் இப்போது இடைத்தேர்தல் இல்லை” என்று அறிவித்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஆளுங்கட்சிக்கு ஆறுதலையும், எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியையும் தந்துள்ளது.

இதற்கு முன்பு தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் மழை காலத்தில் நடத்தப்பட்டதே இல்லையா? என்று வரலாற்றை புரட்டிப்பார்த்தால் பல பரபரப்பு தகவல்கள் கிடைக்கின்றன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையாகும். இதை வைத்து பார்க்கும்போது, 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே 4 இடைத்தேர்தல்களும், 2 பொதுத்தேர்தல்களும் மழை காலத்தில் நடந்துள்ளன.

அதாவது, 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 இடைத்தேர்தல்களும், 2 பொதுத்தேர்தல்களும் தமிழகத்தில் நடந்துள்ளது.

2011-ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி திருச்சி மேற்கு தொகுதிக்கும், 2012-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி சங்கரன்கோவில் தொகுதிக்கும், அதே ஆண்டு ஜூன் 12-ந் தேதி புதுக்கோட்டை தொகுதிக்கும், 2013-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி ஏற்காடு தொகுதிக்கும், 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் ஆலந்தூர் தொகுதிக்கும், 2015-ம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கும், 2015-ம் ஆண்டு ஜூன் 27-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கும், 2016-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி திருப்பரங்குன்றம் தொகுதிக்கும், 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதுதவிர, தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் 19-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டன. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகாரால் இந்த 2 தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் தாமதமாக நடத்தப்பட்டது.

இந்த புள்ளிவிவரத்தை வைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. ஆட்சி காலத்திலேயே 6 தேர்தல்கள் மழை காலத்தில் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது மழை காலத்தை காரணம் காட்டி, தேர்தலை தள்ளிவைக்கச் சொல்வதின் பின்னணியில் மர்ம முடிச்சு இருப்பதாகவே தெரிகிறது.

அதாவது, தமிழகத்தில் 2004-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடைபெற்ற 19 இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றி வாகை சூடியிருக்கிறது. 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற 11 இடைத்தேர்தல்களில் அந்த கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு, 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற 8 இடைத்தேர்தல்களில் அந்த கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார்.

இதனால், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற வரலாற்று பதிவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் தான், திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story