சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
x
தினத்தந்தி 8 Oct 2018 5:04 AM GMT (Updated: 8 Oct 2018 5:04 AM GMT)

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. #Sabarimala #SupremeCourt

புதுடெல்லி

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால் இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுதாக்கல் செய்யாமல், கேரள அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மேலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனிதுரா, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருனாக்கரா ஆகிய இடங்களில் நேற்று அய்யப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக டெல்லியிலும் போராட்டம் நடைபெற்றது.

இதனால் கேரள அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் கலந்து கொள்ளுமாறு அய்யப்பன் கோவிலின் தலைமை தந்திரிகள் மற்றும் கோவிலை முன்பு நிர்வகித்து வந்த பந்தளம் அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று தலைமை தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு  இன்று காலை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில்  அதன் தலைவர் ஷியாலாஜா விஜயன் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்து உள்ளார். மனுவில் அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Next Story