சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது -பினராயி விஜயன்


சபரிமலை விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது -பினராயி விஜயன்
x
தினத்தந்தி 8 Oct 2018 9:12 AM GMT (Updated: 8 Oct 2018 9:12 AM GMT)

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பு விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார். #Sabarimala #SupremeCourt

புதுடெல்லி

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. ஆனால் இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனுதாக்கல் செய்யாமல், கேரள அரசு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்துகொள்கிறார்கள். மேலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதனால் கேரள அரசுக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர்  முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது;-

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது.  இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரச்சினைகளை ஏற்படுத்துவோருக்கு அரசு அடிபணியாது . என அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு  இன்று காலை தக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

Next Story