சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் கைது


சத்தீஷ்காரில் 16 நக்சலைட்டுகள் கைது
x
தினத்தந்தி 8 Oct 2018 12:18 PM GMT (Updated: 8 Oct 2018 12:18 PM GMT)

சத்தீஷ்காரில் 2 பெண் நக்சலைட்டுகள் உள்பட 16 நக்சலைட்டுகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராய்பூர்,

90 பேர் கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கான தேர்தல் வருகிற நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் முதற்கட்ட தேர்தல், இடதுசாரி தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்காரின் தென்பகுதியை சேர்ந்த 18 தொகுதிகளுக்கு நடைபெறும்.  2வது கட்ட தேர்தல் வடபகுதியை சேர்ந்த 72 தொகுதிகளுக்கு நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிறப்பு அதிரடி படை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து மின்பா கிராமம் அருகே அமைந்த மலை பகுதியில் நடத்திய சோதனையில் 16 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 2 பேர் பெண்கள்.  கைது செய்யப்பட்டவர்களில் சோதி கங்கா, மத்வி பீமா, பஞ்சம் நந்தா, மற்றொரு மத்வி பீமா மற்றும் முசக்கி முக்கா ஆகிய 5 பேர் கடந்த வருடம் ஏப்ரலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது தாக்குதல் மற்றும் பாதுகாப்பு படையினரை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை நிறுவுவது போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story